காலத்தின் கண்ணாடி சின்ன விஷயங்களின் கடவுள்

எழுத்தாளர்கள் எப்பொழுதும் செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவர். அதற்கு நியாயமான காரணங்கள் பல உண்டு. சமூகத்தினை மாற்ற நினைக்கும் சக்தி எழுத்தாளர்களிடம் இருப்பதாக வாசகர்களின் புரிதல்கள் அமைகின்றன. ஒரு விடயத்தினை எழுத்தாக்கமாக கொண்டு வருகின்ற போது அவ்விடயம் மக்கள் மத்தியில் செயல் வடிவம் பெற வேண்டும் என்பதே எழுத்தாளனின் உயரிய நோக்கமாக இருக்கும்.

அவ்வகை நோக்கத்தினை செயற்படுத்த அவ் எழுத்தாளன் என்ன முயற்சிகளை மேற்கொண்டான் என்பதே அவ் எழுத்துக்களினுடைய வெற்றி என்பதாகும். வெறுமனே எழுத்தில் மட்டும் தன்னுடைய கருத்துக்களை புதைத்து விட்டு செயற்பாட்டு வெளியில் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாது விடுவது அவ்வெழுத்துக்களின் தோல்வியாகவே கருதப்படும். ஒரு எழுத்தாளன் சமூகத்தின் மீது பெரும் பார்வை கொண்டவனாகவே காணப்படுவான். அதே போன்று ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளன் மீது ஒட்டு மொத்த சமூகத்தின் பார்வையும் பொதிந்திருக்கும் என்பதை நாம் அவதானிக்கலாம். எழுத்துக்கள் மிகப் பெரும் சக்தி வாய்ந்தவை என்பதினை உலக வரலாறுகள் எமக்கு கற்பித்துத் தருகின்றன. ஒரு பேனாவினால் எவ்வகையான சமூகக் கட்டமைப்பின் மீதும் ஆதிக்கத்தினை செலுத்த முடியும் என்பதினை உலக வரலாறுகள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

மழுங்கடிக்கப்பட்ட ஒரு விடயத்தினை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், வெளிச்சத்தில் இருக்கின்ற ஒரு விடயத்தினை மழுங்கடிக்கவும் எழுத்துக்களால் மட்டுமே முடியும் என்பதினை நாம் அவதானிக்க முடியும்... 

இதன் தொடர்ச்சியாய் எழுத்தாளராகவும், செயற்பாட்டாளராகவும் தன்னுடைய கருத்தியல் வாழ்வினை மேற்கொள்ளும் அருந்ததி ரோய் எழுத்துலகில் மிக முக்கியமானவர். மிகத் தீவிரமான தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் அருந்ததி ரோய் சமூகத்தின் ஆழமான நம்பிக்கைகள் மீது பல கட்டுடைப்புக்களைச் செய்துள்ளார்.

இந்தியாவினுடைய நட்சத்திர எழுத்தாளர் என்று அறியப்பட்டு, களத்தில் நின்று இயங்குகின்ற ஒரு தீவிரமான செயற்பாட்டாளராகவும் காணப்படுகிறார். இவருடைய பிரசித்தி பெற்ற நாவலான The God of Small things 1997ம் ஆண்டிற்கான புக்கர் பரிசினை பெற்றுக் கொண்டது மிக முக்கியமான விடயமாகும். எழுத்துக்களோடு மட்டும் முடங்கிவிடாது Narmatha Bachave Anthola| வில் (நர்மதாவைக் காப்பாற்றும் போராட்டம்) என்பதிலும் இணைந்து கொண்டார். சர்வதிகாரத் தன்மையினால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களுக்காக ஓயாத குரல் கொடுத்து வரும் அருந்ததி ரோய் ஆதிவாசிகள், தலித்துகள் மீதும் அதிக கரிசனை கொண்டவர் என்பதினை இவரது பல கட்டுரைகள், விமர்சனப் பத்திகள் எமக்கு நினைவூட்டுகின்றன.

சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் மீது தீர்க்கமான பல விமர்சனங்களை முன்வைக்கும் அருந்ததி ரோய் விசித்திரமான விவாத எழுத்தினைக் கொண்டவர். அண்மையில் இவர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய மாற்றீடான விமர்சனக் கட்டுரையானது பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. எப்படி இருப்பினும் தான் கொண்ட கருத்திலிருந்தும், தன்னுடைய எழுத்துக்களில் இருந்தும் சோரம் போகாத இவரின் படைப்புக்கள் மிகுந்த தன்மானம் மிக்கவை எனலாம்... 

நீட்சியான ஆய்வுத் தன்மையும், அற்புத மொழிநடையினையும் கொண்ட இவரின் பல கட்டுரைகள் உலகக் கவனம் மிக்கவை. மரபாக பின்பற்றி வரும் ஒழுங்கற்ற சடங்குகளின் மீது தன்னுடைய வெறித்தரமான விமர்சனத்தினை முன் வைப்பவர்கள் எழுத்தாளர்களில் மிக சொற்பமானவர்களே.

ஆனால் அருந்ததி ரோயின் எழுத்துக்கள் இவற்றிற்கு முற்றிலும் மாற்றமானவை. சமூகப் பரப்பின் மீது தன்னுடைய கருத்துக்களை திணிக்காமல் சமூகம் கொண்டிருக்கின்ற மூர்க்கத்தனமான நம்பிக்கைகளின் மீது தன்னுடைய எழுத்துக்களை வெளிப்படுத்துபவராகவே அருந்ததி ரோய் இருக்கிறார். தன்னுடைய எழுத்துக்களின் மீதும், அவ்வெழுத்துக்களை செயற்பாட்டாளராக நின்று செயற்படுத்துவதின் மீதும் முழு நம்பிக்கை கொண்டியங்கும் அருந்ததி ரோய் எழுத்துக்களின் தன்மானம் காக்கின்ற ஒரு அற்புதமான படைப்பாளியாவார்...  


Add new comment

Or log in with...