பாதிப்புற்றோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது | தினகரன்


பாதிப்புற்றோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,000-ஐ தாண்டியுள்ளதாக ஏ.எஃ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வைரஸுக்கு இதுவரை 3,800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,000 -ஐ தாண்டியுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை காலை நி​ைலவரப்படி இந்த வைரஸ் தொற்று 600 பேருக்கு புதிதாக ஏற்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரையில் 80,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கையும் இங்கு அதிகமாகவே உள்ளது.

இத்தாலியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து அங்கு போர்க் கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் இதுவரையில் 366 பேர் உயிரிழந்தனர். 7,375 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் தென்கொரியாவில் 51 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில் இத்தாலியில் அதைவிட பல மடங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதன் தாக்கம் அதிகமாக உள்ள வடக்கு பிராந்திய பகுதிகளில் வசிக்கும் 1.5 கோடி பேரை தடுப்புக் காவலில் வைக்க இத்தாலி அரசு துரிதகதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் அருகில் உள்ள வெனிஸ், மிலன் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என இத்தாலி அரசு கூறியுள்ளது.

ஐரோப்பியாவில் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,112-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்பந்தாட்ட போட்டி உள்பட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாக ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பாஹன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகளுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, வடகொரியாவின் எல்லைப் பகுதிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், வடகொரியாவில் உள்ள தூதரகங்கள் அனைத்தும் திங்கட்கிழமை மூடப்பட்டன. தூதரக அதிகாரிகள் உள்பட வெளிநாட்டைச் சேர்ந்த அனைவரும் அவர்களின் சொந்த வளாகத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நியூயோர்க்கில் கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்ததையடுத்து, அங்குள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.போர்க்கால அடிப்படையில் நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைச்சாலைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். மிலன் சிறையில் திங்கட்கிழமை பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர்.

சான் பிரான்சிஸ்கோ கடற்பகுதிக்கு வந்த 'கிராண்ட் பிரின்சஸ்' சொகுசு கப்பலில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அந்தக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு பயணிகள் யாரும் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அந்தக் கப்பலில் 54 நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். அந்தக் கப்பலில் இருந்து 2,000-க்கும் மேற்பட் பயணிகளை மீட்க கலிஃபோர்னியா அதிகாரிகள் தயாராகியுள்ளனர்.


Add new comment

Or log in with...