வருமானம் குன்றிய நிலையில் மரக்கறி உற்பத்தியாளர்கள் | தினகரன்


வருமானம் குன்றிய நிலையில் மரக்கறி உற்பத்தியாளர்கள்

தற்போது மலைநாட்டிலிருந்து சந்தைக்குக் கொண்டு வரப்படும் கரட்,  லீக்ஸ், போஞ்சி, தக்காளி, கறிமிளகாய் போன்றவற்றின் மொத்தவிலை கிலோ 300  ரூபாவையும் தாண்டியுள்ளது. அதற்கு இணைந்ததாக சில்லறை விலையும் ரொக்கட்  வேகத்தில் ஏறியது. இலங்கையில் அநேகமான விவசாயிகள் சந்தையின் விலை  அதிகரிப்பை கருத்தில் கொண்டு குறுகிய கால பயிர்களை பயிரிட ஆர்வம்  கொண்டார்கள்.

கடந்த நாட்களில் வெள்ளரிக்காயின் மொத்த விலை 1கிலோவுக்கு  100- தொடக்கம் 150ரூபாவாக இருந்தது. 45நாட்களுக்குள் அறுவடையைப் பெற முடியும் என்பதால்  ரஜரட்ட மற்றும் தம்புள்ளையை அண்டிய விவசாயிகள் வெள்ளரிக்காயை உற்பத்தி  செய்தார்கள். அதனால் தம்புள்ள மற்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய  நிலையத்துக்கு தற்போது அதிகளவு வெள்ளரிக்காய் கிடைத்து வருகின்றது. வழங்கல்  அதிகரித்ததால் கேள்வி குறைந்ததன் காரணமாக வெள்ளரிக்காய் கிலோ 10- ரூபா தொடக்கம் 20  ரூபாவாக குறைந்துள்ளது. 

சந்தையில் கோவாவின் மொத்த விலையும் 100- ரூபா தொடக்கம் 130ரூபாவாகும்.  தற்போது தம்புள்ள தனியார் விதை விற்பனை நிலயங்களில் கோவா விதைகளுக்கு  தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு விற்பனையாளர் தான் நாளொன்றுக்கு 2000பக்கெட் கோவா விதைகளை விற்றதாகக் கூறினார். 

விவசாயிகள் இவ்வாறு குறுகிய கால பயிர்கள் மூலம் இலாபம் பெற  பயிரிட்டாலும் இறுதியில் அதிகளவு அறுவடை காரணமாக பாதிக்கப்படுவது  விவசாயிகளேயாவர். 

மாத்தளை, யட்டவத்தவில் வசிக்கும் என்.எம். வீ. நவரத்ன என்பவர் தம்புள்ள  பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி உற்பத்தி செய்து விற்பனைக்கு  கொண்டு வரும் விவசாயி ஆவார்.

“நான் பத்து வருடங்களாக மரக்கறிச் செய்கையில்  ஈடுபட்டு வருகின்றேன். போஞ்சி விதை 1கிலோ 1450வீதம் மூன்று கிலோ விதைகளை  பயிர் செய்தேன். நான் 1கிலோ விதையை பயிரிட 70,000ரூபாவை செலவு செய்தேன்.  தற்போது போஞ்சியின் மொத்த விலை கிலோவுக்கு 150_-200ரூபாவாகும். சந்தையில் 1  கிலோவுக்கு நூற்றுக்கு 4வீத கமிஷன் மற்றும் பொதிக்கு 35ரூபா,  தொழிலாலிக்கு 10ரூபா அறவிடுவார்கள். தற்போதைய விலை குறைவால் எமது இலாபம்  குறைவடைந்து விடும். தம்புள்ளைக்கு வரும் மொத்த தொகை குறைந்தால்தான் விலை  அதிகரிக்கும். தற்போது யாழ்ப்பாணம், வெலிமடை போன்ற இடங்களிலிருந்து போஞ்சி  வரத் தொடங்கியுள்ளது.  

யாழ்ப்பாணம், சுன்னாகம், ஏழாலை தெற்கு ஆகிய  பிரதேசங்களிலிருந்து கறிமிளகாய், பச்சை மிளகாய், வெங்காயப்பூ, கிழங்கு  என்பவற்றை சந்தைக்கு கொண்டுவந்த விவசாயியான கே. மணிவண்ணன் கூறுவதாவது: 

"தற்போதைய நாட்களில் மரக்கறி விலை நன்றாக உள்ளது. இன்று  கறிமிளகாய் 1கிலோ 220ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. பச்சை மிளகாய் 180  ரூபா, வெங்காயப்பூ 120ரூபா, உருளைக் கிழங்கு 80தொடக்கம் 100ரூபாவாக உள்ளது. ஆறு  போகங்களுக்குப் பின்னர் இம்முறையே எமக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. அதனால்  மரக்கறி வகைகளை பயிரிட விரும்புகின்றோம். யாழ்ப்பாண விவசாயிகள் லீக்ஸை  தவிர ஏனைய மரக்கறி வகைகள் அனைத்தும் பயிரிடுகின்றார்கள். உருளைக் கிழங்குக்கு  கிடைக்கும் விலை நியாயமானதல்ல. இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகள்  தம்புள்ளயில் உள்ளன. கிலோ 60_-70ஆகும். உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க  வேண்டுமென்றால் உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும்."

இவ்வாறு வேண்டுகோளையும் அவர் முன்வைத்தார். அகலவத்தை, மத்துகமயில் வசிக்கும் பீ. டீ.  தமிந்த என்பவர் பத்து வருடங்களாக தம்புள்ள சந்தையில் மரக்கறியை மொத்த விலைக்கு  வாங்கி மத்துகம பிரதேசத்தில் மொத்த மற்றும் சில்லறை விலையில் விற்பவர். 

“ஏனைய நாட்களில் ஒன்றரை இலட்ச ரூபாவில் வாங்கும் மரக்கறிக்கு  தற்போது மூன்றரை இலட்சம் ரூபா வரையில் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த  வியாபாரத்தில் இலாபம் பெறுவது சிரமமாகும். போக்குவரத்துச் செலவு, உணவுக்கான  செலவு, விரயமாகும் செலவு என்பவற்றைக் கழித்தால் சிறிதளவு இலாபமே கிடைக்கின்றது"  என அவர் தெரிவித்தார்.

மரக்கறி விலையேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த  தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் யூ.  பீ. ஏக்கநாயக்க "நீண்ட காலமாக விவசாயிகள் தம்புள்ள சந்தையில் அதிக  விலை கிடைக்கும் குறுகிய காலப் பயிர்களை பரியிடவே விரும்புகின்றார்கள்.  விவசாயிகள் அறிவுறுத்தப்படுவது குறைவாகவே உள்ளது. இலங்கையில் எல்லா  மாவட்டங்களிலும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றார்கள். அந்தந்த  பிராந்தியங்களில் பயிரிடப்பட வேண்டிய பயிர்கள் பற்றி விவசாயிகள்  அறிந்திருப்பது மிகக் குறைவு. அதற்கான பெரும் பொறுப்பு விவசாயத்  திணைக்களத்துக்கு உள்ளது. தம்புள்ள சந்தை அதிகாலையிலேயே பரபரப்பாக  இயங்கும். விவசாயிகள் மாலை வேளையில் அறுவடை செய்து அதிகாலையிலேயே  சந்தைக்குக் கொண்டு வருவார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து வர்த்தகர்கள் வந்து  அவற்றை வாங்கிச் செல்வார்கள். இலங்கையின் 24மாவட்டங்களில் 16மாவட்ட  மரக்கறிகள் தம்புள்ள சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. மரக்கறி விலை  அதிகரிப்புக்கு முக்கிய காரணம் போக்குவரத்துச் செலவு அதிகம். 3000கிலோ  கிராம் மரக்கறி ஏற்றிய லொறியொன்று நுவரெலியாவிலிருந்து தம்புள்ளைக்கு  வருவதற்கு செலவு குறைந்த பட்சம் 6000ரூபாவாகும். சாரதிக்கு 3000ரூபா,  உதவியாளருக்கு 1800ரூபா. இருவருக்குமான சாப்பாடு செலவு 1500ரூபா. அதனால் 1  கிலோ கிராமுக்கு 20ரூபா சேர்க்க வேண்டும். இந்நடவடிக்கையில் ஏற்படும்  செலவைக் குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார். 

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவத்துக்குப்  பொறுப்பான செயலாளர் மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளர் லக்சுமி ஹேவாபதிரண  மரக்கறி விலை குறித்து பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

"தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இலங்கையின் பல பிரதேசங்களிலிருந்தும்  மரக்கறி வகைகள், பழங்கள் தினந்தோறும் 3000_- 5000மெற்றிக் தொன் வரை  கொண்டு வரப்படுகின்றன. இரவு பகல் சந்தையாக செயல்படுகின்றது. இலங்கையின் எல்லா இடங்களிலிருந்தும் மரக்கறி வியாபாரிகள் வந்து செல்லும் இடம் இதுவாகும். இங்கு கேள்வி மற்றும் வழங்கலை அடிப்படையாகக் கொண்டு மரக்கறி மற்றும்  பழங்களின் விலைகள் மாற்றமடைகின்றன. 

இந்தச் சந்தையில் விலைகளில் ஏற்படும் மாற்றத்தில் எந்தவொரு  நிறுவனமும் தலையிடுவதில்லை. இங்கு நிர்வாக நடவடிக்கைகள் முகாமைத்துவத்தின்  பொறுப்பில் மேற்கொள்ளப்படுவதுடன் வர்த்தக சபை, விவசாயிகள் அமைப்புகளுக்கு  அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இங்கு மரக்கறி மற்றும் பழங்களின் வீண்  விரயத்தைத் தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதி செய்யும்  முறையொன்றை அறிமுகம் செய்து அதனை பிரபலப்படுத்த முகாமைத்துவ பொறுப்பில்  நிதிச் சலுகையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன களஞ்சிய  வசதிக்காக பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் கட்டடமொன்று  நிர்மாணிக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

சரத் எரமினிகம்மன
தம்புள்ளை


Add new comment

Or log in with...