மாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்

சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகவும் பாடசாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாதி, மத, மொழி கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை சாரணர் இயக்கம் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது.வயது வந்தோர்க்கான கல்வி, வீதி விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியை சாரணர் இயக்கத்தினர் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். 

உலகத்தில் எத்தனையோ விதமான சங்கங்களும், இயக்கங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், ஆறு வயது குழந்தைப் பருவத்திலுள்ள மாணவ மாணவியருக்குக் கூட ஒழுக்கத்துடன் விளையாட்டு முறையில் கீழ்ப்படிதல், பெற்றோரை மதித்தல், கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்புண்புகளை வளர்க்கும் ஒரே இயக்கம் சாரண இயக்கம் என்றால் மிகையாகாது. 

சாரணியம் முதன் முதலில் 1907ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை இங்கிலாந்தைச் சேர்ந்தவரான ​ெராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவல் என்பவர் தோற்றுவித்தார். இவரைச் சிறப்பாக 'சாரணியத்தின் தந்தை பேடன் பவல்' என்று அழைப்பர். இவ்வியக்கம் தோன்றிய சில ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பரவியது. இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோள் நாட்டுப்பற்று, இறைபற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதிபலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குதலாகும். மேலும், இது உற்றுநோக்குதல், அறிவுத் திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற திறமைகளையும் வளர்க்கிறது. 

சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்ற சாரண சாரணியர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், நாட்டுப் பற்றுடையவர்களாகவும், மரியாதை உடையவர்களாகவும், பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிக்கிறவர்களாகவும், விலங்குகளிடத்தே அன்பு காட்டுபவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், சிக்கனமானவர்களாகவும் எண்ணம், வாக்கு, செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் விளங்குவர். 

குருளையர், சாரணர், திரிசாரணர் ஆகியவை மாணவர்களுக்கும் நீலப்பறவை, சாரணியர், திரி சாரணியர் என்ற மூன்று பிரிவுகள் மாணவியருக்கும் பொருத்தமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 

சாரண, சாரணியர்களுக்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் தேசிய ரீதியில் சாதனை படைக்கும் சாரண, சாரணியர்களுக்கு ஜனாதி பதி சாரணர் விருது, ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதியினால் நேரடியாக வழங்கப்படுகிறது. 

சாரண, சாரணியர்களின் பல்வேறு செயல் திட்டங்களை வெளிக்கொண்டு வரும் பொருட்டு பாடசாலை மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டங்களில் சாரணர் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு கலாசாரங்களையும் பிரதி பலிக்கும் வகையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் பங்கேற்பதால் இனநல்லுறவுடன் நட்புறவும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மேலும், கலாசாரங்களை வலியுறுத்தும் ஊர்வலங்களும், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் இதில் இடம்பெறுகின்றன. 

சாரண இயக்கத்தில் மாணவர்களைப் பாடசாலை சூழலில் இருந்து விடுவித்து இயற்கைச் சூழலுக்கு அழைத்துச் சென்று அங்கு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதில் பலவகையான முடிச்சுகளிடுதல் அவற்றின் பயன்கள், எளிய உடற்பயிற்சிகள், சமிக்ஞைகள் மற்றும் முதல் உதவி போன்ற பல்வேறு செயல்முறைத் திட்டங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. 

சாரண மாணவர்கள் மற்ற மாணவர்களில் இருந்து வேறுபட்டு தனித்துக் காணப்படுவர். அவர்களுடைய சாரண வணக்கமும், சாரண கைகுலுக்கலும், கைதட்டுதலும் சிறப்பான முறையில் பிறரைக் கவரும் வண்ணம் இருக்கும். 

சாரணத் தந்தை பேடன் பவல் 1857ம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 22ம் திகதி லண்டனில் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த பேடன் பவல் தாயாரால் வளர்க்கப்பட்டார். அவர் 1876ம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இராணுவப் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக 1907ம் ஆண்டு பிரவுண்சீத் தீவில் முதன் முதலில் 20மாணவர்களைக் கொண்டு சாரண இயக்கத்தைத் தோற்றுவித்தார். 

பின்னர் அவரது மனைவியினால் மாணவியருக்காகத் தனியாக சாரணிய இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.இங்கு ஆரம்பிக்கப்பட்ட சாரணியம் மிக விரைவாக வளர்ந்து, பின்னர் பல நாடுகளுக்கும் பரவி இன்று உலகளாவிய பேரியக்கமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

எம்.ஐ.எம். அஸ்ஹர்
மாளிகைக்காடு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...