"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி...”;"நரிமுகத்தில் விழித்தனையோ' | தினகரன்


"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி...”;"நரிமுகத்தில் விழித்தனையோ'

நாம் எண்ணிய எண்ணப்படி எதனையும் செய்துவிட முடியாது. எல்லாம் இறைவன் ஆணையின் வண்ணமே நடக்கும். இதை மெய்கண்டார், "ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே' என்று "சிவஞான போதம்' எனும் மெய்கண்ட சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதன் எண்ணியதை எண்ணியவாறு முடிப்பானேயானால் கீழ் மேலிராது. வாயுதேவன் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாமல் வாடியதும்; அக்கினிதேவன் அத்துரும்பை எரிக்க முடியாது இளைத்ததும்; இந்திரன் அசைவற்று அலக்கணுற்றதும் கேநோபநிடதத்தால் புலனாகின்றதன்றோ?

"எல்லாம் தன்னாலேயே ஆகின்றன' என்று எண்ணி இறுமாந்து சிலர் திரிகின்றனர். "இதனை முடிக்க வேண்டும்; இதனை ஈட்ட வேண்டும்' என்று பலகாலும் முயன்று நிற்பினும் அவை முடியாமல் போகின்றன.

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

 தொகுத்தார்க்குந் துய்த்த லரிது'

என்றார் திருவள்ளுவர். ஆதலால், "இதை இப்படி முடிக்க வேண்டும். அதை அப்படி முடிக்க வேண்டும்' என்று மனக்கோட்டை கட்டக்கூடாது. திருவருளை முன்னிட்டே எதனையும் செய்ய வேண்டும்.

இறைவனுடைய இன்னருள் துணை செய்து முடித்துக் கொடுக்கும் இவ்வுண்மையை கீழ்க்காணும் எடுத்துக்காட்டுப் பாடலால் கண்டு தெளியலாம்.

கரிய நிறமும் பெரிய திறமும் திரண்ட புயமும் இருண்ட மனமும் மருண்ட சினமும் உடைய வேடன் ஒருவன் இருந்தான். அவ்வேடன் ஒரு நாள் காட்டை வளைத்து வேட்டையாடி இங்கும் அங்கும் திரிந்தான்.

அவ்வாறு திரியும்போது ஒரு பெரிய மத யானையைக் கண்டான். அதைக் கணையால் எய்திக் கொல்லும் பொருட்டு ஒரு புற்றில் மறைந்து நின்றான். யானை அருகில் வந்ததும் கணை தொடுத்துக் கொன்றான். யானை வீழ்ந்து மாய்ந்தது. அதுசமயம் அவன் காலடியில் மிதியுற்று நொந்த ஒரு நாகம் சீறி அவனைக் கடித்தது. அதனால் வருந்திய வேடன் வெகுண்டு அப்பாம்பையும் ஒரு பாணத்தால் கொன்றான். சிறிது நேரத்திற்குள் விடந்தலைக்கேறி(விஷம்) வேடன் இறந்தான்.

இவ்வாறு யானை, வேடன், பாம்பு மூன்றும் இறந்து கிடந்தன. அங்கு நரியொன்று வந்து சேர்ந்தது. பசியால் வாடி இரையை நாடி வந்த அந்த நரி, இறந்து கிடந்த மூன்று பிணங்களையும் கண்டு "நமக்கு நல்ல உணவு கிடைத்தது' என்று உள்ளம் மகிழ்ந்தது.

"ஆகா! என்ன அதிர்ஷ்டம்? என்னைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யார்? உலகில் ஒருவனுக்கு ஏதாவது ஒரு சிறந்த பொருள் கிடைத்தால் "நரிமுகத்தில் விழித்தனையோ' என்பர். இப்போது நாம் யார் முகத்தில் விழித்தோம் என்று கூறுவது? எவ்வளவு பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது? என் வயிறு செய்த புண்ணியந்தான் யாதோ?' என்று எண்ணி அளவில்லாத ஆனந்தமுற்று ஆடிப் பாடியது.

பின்னர் நரி அம்மூன்று பொருள்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்து, இந்த யானை 6மாதங்களுக்கும், இம்மனிதன் 3நாட்களுக்கும், இந்த நாகம் 2நாட்களுக்கும் எனக்கு உணவாகும். எனவே 185நாள்களுக்கு உணவைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. வெகு சுகமாகத் தின்றுகொண்டே இருக்கலாம். ஆனால் இந்த வேடன் கையிலுள்ள வில்லின் நாணை முதலில் கடித்துத் தின்போம்.

அது ஒரு பாதி வயிற்றுக்கு உணவாகும். அதைத்தான் ஏன் விட்டுவைக்க வேண்டும்? என்று எண்ணியது.

அதற்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திடீரென்று ஒரு குதி குதித்தது. ஓடி வேடன் கையிலிருந்த வில்லின் நாணைக் கடித்தது. கடித்ததும் வில் முனை விரைவில் நிமிர, நரியின் தலை நறுக்குண்டு விழுந்தது. நரி தான் எண்ணிய எண்ணமெல்லாம் அடிமாண்டு இறந்தது. ஆதலால், நமது எண்ணம் எண்ணியபடியே ஈடேறமாட்டாது. எல்லாம் திருவருளாலே நிகழும் என்பதையே இந்நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. அதனால், திருவருளின் வழியே வழிநடந்தால் எண்ணம் ஈடேறும்!

  "கரியொரு திங்க ளாறும்         கானவன் மூன்று நாளும்

  இரிதலைப் புற்று நாகம் இரண்       டுநாள் இரையா மென்றே

  விரிதலை வேடன் கையின்               விற்குதை நரம்பைக் கவ்வி

  நரியனார் பட்ட பாடு நாளை          நாம் படவே நிற்போம்'

எம்.ஜி.விஜயலெஷ்மி
கங்காதரன்...


Add new comment

Or log in with...