புருண்டி மனிதப் புதைகுழிகள்: 6,000 சடலங்கள் கண்டுபிடிப்பு | தினகரன்


புருண்டி மனிதப் புதைகுழிகள்: 6,000 சடலங்கள் கண்டுபிடிப்பு

புருண்டியின் கருசி மாகாணத்தில் ஆறு மனிதப் புதைகுழிகளில் இருந்து 6,000க்கும் அதிகமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இது உள்ளது.

6,032 உடலெச்சங்கள் அதேபோன்று ஆயிரக்கணக்கான துப்பாக்கி குண்டுகள், மூக்குக் கண்ணாடிகள், ஜெபமாலைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலியின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் பீர்ரே க்ளவர் நயிகெரியே செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஆபிரிக்காவின் சிறிய நாடான புருண்டி கடந்த காலத்தில் காலனித்துவ ஆக்கிரமிப்பு, சிவில் யுத்தம் மற்றும் தசாப்தகாலமாக விட்டு விட்டு நிகழ்ந்த இனப்படுகொலை என்று தொடர்ச்சியாக வன்முறைகளை எதிர்கொண்டு வந்தது. இதில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் ஹுட்டு இனக்குழுவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது. 48 ஆண்டுகளின் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உண்மையை வெளியிட்டதை ஆடுத்து இந்த மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புருண்டி மக்கள் தொகை டுட்சி மற்றும் ஹுட்டு இனக் குழுக்களை கொண்டுள்ளது. அங்கு நீடித்த சிவில் யுத்தத்தில் 300,000 பேர் கொல்லப்பட்டதோடு 2005 ஆம் ஆண்டு அந்த சிவில் யுத்தம் முடிவுக்கு வந்தது.


Add new comment

Or log in with...