யெமன் வான் தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு | தினகரன்


யெமன் வான் தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு

யெமனில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா சபை குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில் பதில் தாக்குதல் ஒன்றின் போதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

யெமன் அரச படைக்கு ஆதரவாக செயற்பட்ட டொர்னாடோ விமானம் கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு அல் ஜவுப் மாகாணத்தில் விழுந்துள்ளது. சவூதி கூட்டணி விமானம் ஒன்று இவ்வாறு சுட்டுவீழ்த்தப்படுவது மிக அரிதான சம்பவமாக உள்ளது.

“ஆரம்பக்கட்ட கள அறிக்கைகளின்படி அல் ஹய்ஜா பகுதியில் பெப்ரவரி 15 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 12 பேர் காயமடைந்திருப்பது தெரியவருகிறது” என்று யெமனுக்கான ஐ.நா மனிதாபிமான இணைப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடன் சவூதி தலைமையிலான கூட்டுப்படை கடந்த 2015 தொடக்கம் சண்டையிட்டு வருகிறது. ஹூத்திக்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை தலைநகர் சனாவில் இருந்து துருத்தியதை அடுத்தே யெமன் உள்நாட்டு யுத்தத்தில் இந்த கூட்டுப்படை தலையிட்டது.


Add new comment

Or log in with...