முகநூல் விருந்துபசாரம்; சுமார் 400 பேர் கைது | தினகரன்


முகநூல் விருந்துபசாரம்; சுமார் 400 பேர் கைது

காதலர் தின ஒன்றுகூடல்

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் கண்டியில் ஹோட்டல் மற்றும் கொழும்பில் இரகசிய இடமொன்றிலும் மதுபானம் மற்றும் போதைப்பொருளுடன் முகநூல் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 400க்கும் அதிகமானோரை கலால் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.  

இதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதுடன் கண்டியில் பிரபல ஹோட்டலொன்றிலும் கொழும்பு கறுவாத்தோட்டம் மெயிட்லண்ட் பிளேஸ் பகுதியிலும் இத்தகைய இரண்டு விருந்துபசாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.  

கண்டி பிரதான ஹோட்டலொன்றில் மதுபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களுடன் 200க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக மத்திய மாகாண விசேட கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் 200பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி முகநூல் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களுள் பொலிஸ் பரிசோதகர், சிறைச்சாலை ஜெயிலர், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் தனியார்துறையில் உயர் பதவி வகிக்கும் சிலரும் உள்ளடங்குவதாக மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

மதுபானம் பாவித்த நிலையில் 25 யுவதிகள் மேற்படி விருந்துபசாரங்களில் கலந்துகொண்டிருந்ததாகவும் மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளையில் மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த 17 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.    சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா, ஐஸ், மர்ஜுவானா போன்ற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.  

கண்டி, தம்புள்ள, அநுராதபுரம், கம்பஹா, கொழும்பு, திருகோணமலை போன்ற பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் இளைஞர், யுவதிகள் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டுள்ளதுடன் வெளிநாட்டவர் சிலரும் அதில் பங்கேற்றிருந்ததாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.  

கலால் திணைக்கள அதிகாரிகள் 15பேர் இணைந்து மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். மேற்படி விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்கான கட்டணமாக 2500ரூபா பெறுமதியான டிக்கட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்ததாகவும் மதுபானம் 3500க்கு மேல் இங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

மதுபான அனுமதிப்பத்திரத்தை மீறி நள்ளிரவு 12மணிக்கு பின்னரும் மதுபானம் விற்பனை செய்தமைக்காக குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (ஸ)   


Add new comment

Or log in with...