வரட்சியுடனான காலநிலை; நீர்மின் உற்பத்தி வீழ்ச்சி | தினகரன்


வரட்சியுடனான காலநிலை; நீர்மின் உற்பத்தி வீழ்ச்சி

மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள்

வரட்சியுடனான காலநிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருவதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் நாளாந்தம் 5 வீத நீர்மின் உற்பத்தியே முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 69 வீதமாக காணப்படுவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.   காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 53 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 54 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதமாகவும் காணப்படுவதாக சுலக்‌ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.   வரட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, பாவனையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

சி ல காலங்களில் மொத்த மின்சாரத் தேவையில் மூன்றில் இரண்டுபங்குவரை நீர்மின்உற்பத்தியூடாக உற்பத்தி செய்யப்படும்.வரட்சியான காலநிலையுடன் இது வீழ்ச்சியடைந்துள்ளதோடு 2015 இன் பின்னர் புதிதாக எந்த ஒரு மின்உற்பத்தி திட்டமும் ஆரம்பிக்கப்படாத நிலையில் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் தனியார் துறையிடமிருந்து 200 மெகா ​வோர்ட் மின்சாரம் கொள்வனவு செய்யவும் அமைச்சு முடிவு செய்துள்ளது. 

எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பாவனையாளர்களிடம் கோரப்பட்டுள்ளதோடு தேவையற்ற மின்குமிழ்களையும் மின்விசிறிகளையும் அணைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.(பா)   


Add new comment

Or log in with...