இணக்கப்பாடு எக்காலமும் இல்லை!

‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்றான் பாரதி. நூற்றாண்டுகள் கடந்தாலும், எக்காலமும் தமிழ் கூறும் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அந்த மாபெரும் புரட்சிக் கவிஞன் அக்காலத்தில் எவ்வாறான எண்ணத்தை உள்ளத்தில் வைத்தபடி இவ்வாறு கூறினான் என்பதை இன்றைய காலத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அந்நிய மொழிகளின் மேலாதிக்கத்தினால் தமிழ்மொழி படிப்படியாகத் தேய்ந்து போய், வேற்று மொழிகளின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதற்கான எச்சரிக்கையாக பாரதி இவ்வாறு கூறி வைத்தானா?

இல்லையேல் மேற்குலக நாகரிகம் மீதான மோகத்தினால் தமிழினத்தின் மொழியும், கலை கலாசாரங்களும் வரலாற்றுக்குள் புதையுண்டு போகுமென்ற கவலையினால் அவ்வாறு பாரதி கூறினானா?

இவ்விரண்டுமே இல்லாமல் தமிழினத்தின் ஒற்றுமையின்மை காரணமாக, அவ்வினம் பல துண்டங்களாகப் பிளவடைந்து போய் இறுதியில் அருகிப் போன இனமாகி விடுமென்ற அச்சம் கொண்டானா பாரதி?

இவ்வாறெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இன்றைய வேளையில் உருவாகியிருப்பதற்கான காரணம், இலங்கைத் தமிழர்களின் அரசியல் இணக்கப்பாடின்மை ஆகும்.

வடக்கு, கிழக்கு அரசியலாகட்டும்... இன்றேல் மலையகத்தின் அரசியலாகட்டும்... தமிழர்களின் அரசியலில் நல்லிணக்கப்பாட்டையும் ஐக்கியத்தையும் ஒருபோதுமே காண முடியாதிருக்கின்றது.

இவ்விடயத்தில் முக்கியமாக இக்காலகட்டத்தில் கூற வேண்டியது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரசியல் ஆகும். அது இப்போது சந்திக்கு வந்த விவகாரம் ஆகி விட்டது!

எத்தனை முரண்பாடுகள், எத்தனை பிளவுகள்! தனித்தனியாக வெவ்வேறு கட்சிகள், அவற்றுக்கெல்லாம் ஒவ்வொரு தனித்தனித் தலைவர்கள்!

இத்தலைவர்களெல்லாம் தங்களது உள்ளத்தில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்களென்பது தமிழ் மக்களுக்கு புரியாதிருக்கின்றது. ஊடகங்கள் வாயிலாக மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதையும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் இன்னுமே புரிந்து கொண்டவர்களாகத் தெரியவில்லை.

புதிய புதிய கட்சிகளை இவர்கள் அமைத்துக் கொண்டது தமிழ் மக்களின் நலன்களுக்கான முடிவா? இல்லையேல் தங்களுக்கென்று கட்சியொன்று தேவையென்ற விருப்பத்தினாலா? இவ்வாறு ஆளுக்கொரு கட்சியை நிறுவிக் கொண்டு தேர்தல் களத்தில் நின்றால் வாக்குகள் பிளவடைந்து போய், இறுதியில் வெற்றி வாய்ப்பு யாரையோ போய்ச் சேர்ந்து விடுமென்ற யதார்த்தம் கூடவா இவர்களுக்கு இன்னும் புரியாதிருக்கின்றது?

வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாக்குகள் இவ்வாறு வெவ்வேறு திசைகளில் பிளவடைந்து சென்றால், தமிழ்ப் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை இறுதியில் குறைந்து போய் விடுமென்பது இத்தலைவர்களுக்கெல்லாம் தெரியாத உண்மையல்ல. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுபவர்களாக அவர்கள் இல்லை. தங்களது வெற்றிவாய்ப்பெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... தமது எதிரி தோற்கடிக்கப்பட வேண்டும்!

இவ்வாறான தன்னல சிந்தனையில்தான் தமிழினத்தின் அரசியல் இன்று நகர்ந்து கொண்டிருக்கின்றது. வடக்கில் மாத்திரமன்றி, கிழக்கிலும் தமிழர்களின் அரசியல்போக்கு இவ்வாறுதான் இருக்கின்றது. வடக்கில் நான்கு அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என்ற பெயரில் கூட்டமைப்பொன்றை சமீபத்தில் உருவாக்கியிருக்கின்றன.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கத்தின் தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி சசிதரனின் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய அமைப்புகளே பொதுக் கூட்டணியொன்றை இப்போது ஸ்தாபித்திருக்கின்றன.

இக்கூட்டணியின் தலைவராக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கூட்டணி இன்றைய வேளையில் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பொதுத் தேர்தலை நோக்கிய இலக்கு என்பது தெரிந்த விடயம். இந்த அணியில் உள்ளவர்களெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிருப்தியாளர்கள். அதிலும் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள் எனக் கூறுவதே பொருத்தம்.

இந்தக் கூட்டணியில் ஒன்று சேர்ந்துள்ள அணிகளின் முதலாவது இலக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்த வேண்டும் என்பதுதான். இரண்டாவது இலக்குதான் தங்களது வெற்றி தொடர்பானதாகும்.

‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என்ற பொது அமைப்பில் அங்கம் வகிக்கின்ற அரசியல்வாதிகளை சாதாரணமானவர்களென்று ஒதுக்கி விட முடியாதிருக்கிறது. அவர்களெல்லாம் வடக்குத் தமிழர் மத்தியில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தக் கூடியவர்கள். தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை கவர்ந்தெடுக்கக் கூடியவர்கள்.

மறுபுறத்தில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக செல்வாக்கை இழந்து விடவில்லை. அதற்கென்று வாக்கு வங்கியொன்று அங்கு உண்டு. எனவே வடக்கில் இரு அணியினருமே ஏறக்குறைய சமபலமுள்ள எதிரிகளாவர். அவர்கள் இனிமேல் முட்டிமோதப் போகின்றார்கள். தேர்தலுக்கான பிரசார யுத்தம் ஆரம்பமாகியதும் தமிழர்களின் அரசியல் ஊர் சிரிக்கும் அளவுக்கு வந்து விடப் போகின்றது.

தமிழ்க் கூட்டமைப்பு மீது ஆரம்பத்தில் இருந்தே ஒரு தரப்பினருக்கு அதிருப்தியும் வெறுப்பும் உள்ளன. கடந்த நல்லாட்சிக் காலத்தில் கூட்டமைப்பின் உறங்கு நிலையே இவ்வெறுப்புக்குக் காரணம். கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சி மீதுதான் அவர்களுக்கு வெறுப்பு! அந்த வெறுப்புதான் இப்போது பலம் வாய்ந்த மாற்று அணியொன்றை உருவாக்கியிருக்கிறது.

ஆனாலும் தனியொரு கட்சியை வீழ்த்துவதற்கான பரிகாரம் இதுவல்ல. இவ்வாறான பிளவுகளால் தமிழினத்துக்குத்தான் மிகுந்த பாதிப்பு ஏற்படப் போகின்றது. தமிழரின் அரசியல் ஏற்கனவே பலமிழந்து போய்க் கிடக்கின்றது. இவ்வேளையில் தமிழரின் அரசியல் பலமென்பது முற்றாகவே இழக்கப்படும் அபாயம் உள்ளதென்பது தெளிவாகவே தெரிகின்றது.


Add new comment

Or log in with...