இலங்கை விவகாரத்தை ஐ.நா அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் | தினகரன்


இலங்கை விவகாரத்தை ஐ.நா அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்

கால அவகாசம் வழங்கக்கூடாது சித்தார்த்தன், செல்வம் தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாது. இலங்கை விவகாரத்தை ஐ.நா. அடுத்த கட்டத்துக்கு - மாற்றுப் பொறிமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான சூழல் - நேரம் இப்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு தானும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நாவில் கால அவகாசம் கோரியது.  

இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. முதலாவது ஆண்டு எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் கோட்டாபய அரசு ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.  

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது.. 

கால அவகாசம் என்பது இலங்கை அரசின் செயற்பாட்டை பன்னாட்டுச் சமூகத்துக்கு நிரூபித்துக் காட்டும் வாய்ப்பு. அவர்கள் எதையும் செய்யமாட்டார்கள் என்பதை சர்வதேச சமூகம் இதன் ஊடாக விளங்கிக் கொண்டிருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை மஹிந்த (2012 -– 2014) மூர்க்கத்தனமாக எதிர்த்தார். மைத்திரி - ரணில் அரசு ஐ.நா. மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லியது. ஆனால் நாள்களைக் கடத்தினார்களே தவிர செயற்படுத்தவில்லை. இரண்டு தரப்புமே ஒன்றுதான்.   இனியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது. அது உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கவேண்டும். இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானதுஇ ஐ.நா. மனித உரிமைகள் சபை தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதாகத்தான் நாம் கருதவேண்டிவரும். தமிழர்களுக்கு நியாயம் வழங்கவேண்டும்.

பருத்தித்துறை விசேட நிருபர்   


Add new comment

Or log in with...