இஸ்ரேலிய குடியேற்றங்களுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களின் பட்டியலை ஐ.நா வெளியீடு

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் யூதக் குடியேற்றங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பட்டியலை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 112 வர்த்தக நிறுவனங்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு இவைகள் குடியேற்றத்துடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில் ஏர்பிஎன்பி.கொம், எக்ஸ்பீடியா குழுமம் மற்றும் மோட்டரோலா சொலூசன் ஆகிய நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன. இவை அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, லக்சம்பர்க், தாய்லாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களாகும்.

இது சர்வதேச சட்டத்திற்கான வெற்றி என்று பலஸ்தீனர்கள் இந்த அறிக்கையை வரவேற்றிருப்பதோடு, இஸ்ரேல் இதனை ‘வெட்ககரமானது’ என்று குறிப்பிட்டுள்ளது.

1967 இல் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சுமார் 140 குடியேற்றங்களில் 600,000 வரையான யூதர்கள் வசிக்கின்றனர். சர்வதேச சட்டத்திற்கு அமைய இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமென கருதப்படுகிறது.

ஐ.நாவும் இந்தக் குடியிருப்புகள் 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது. எனினும் இஸ்ரேல் அதனை மீறி செயற்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்கா கடந்த நவம்பர் மாதம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று ஐ.நா உடனடியாக அறிவித்தது.

“யூதக் குடியிருப்புகள் தொடர்பான அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவது, சர்வதேச சட்டத்தையோ, சார்வதேச நீதிமன்றம் மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிலைப்பாட்டிலோ மாற்றத்தை ஏற்படுத்தாது. அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற எங்களது நிலையில் மாற்றமில்லை” என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்களுடன் தொடர்புடைய குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து வர்த்தகங்கள் தொடர்பில் தரவு ஒன்றை பெறும் 2016 ஆம் ஆண்டின் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் மீது சர்வதேச ரீதியில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் பலஸ்தீன பிரதமர் மொஹமது ஷெட்டையா, சட்டவிரோத குடியேற்றங்களில் இருந்து இந்த நிறுவனங்கள் தமது தலைமையகங்கள் மற்றும் கிளைகளை உடன் மூடும் படியும் வலியுறுத்தியுள்ளார்.

பட்டியலில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் சட்ட சார்பு முன்னறிவித்தல் விடப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றங்களுடன் வர்த்தகம் செய்வது போர் குற்றத்திற்கு உதவுவதாகும் என்றும் அது குறிப்பிட்டது.

இந்தப் பட்டியலில் பெயரிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இது தொடர்பில் தமது பதிலை உடன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...