சுகததாச விளையாட்டரங்கில் குற்ற ஒழிப்பு விசாரணை பிரிவு திறப்பு

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் விசேட பொலிஸ் விசாரணை பிரிவுக்கு தேசிய ஆண்கள் கைப்பந்தாட்ட அணிக்கு எதிரான முறைப்பாடே முதலாவதாகக் கிடைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2019 இலக்கம் 24 விளையாட்டுடன் தொடர்பான குற்ற ஒழிப்பு பத்திரத்தை அமுல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் விசாரணை பிரிவின் காரியாலயத்தை கடந்த 11ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ருவன்சந்திர சில்வா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்களத்திள் பிரதானிகள் உட்பட பல தேசிய விளையாட்டு கழங்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தின் போது விசேட விசாரணைப் பரிவின் பிரதான அதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜகத் பொன்சாகாவும், பிரதி அதிகாரியாக எஸ். எம். ஜே. சமரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இத்திறப்பு விழா வைபவத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டின் போது: அண்மையில் நேபாள காத்மன்டுவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் நடைபெற்ற ஆண்களுக்கான கைப்பந்தாட்ட அரையிறுத்திப் போட்டியில் இலங்கை அணி வீரர்களின் நடத்தை தொடர்பாக சந்தேகம் உள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெனரல் தம்மிக்க முத்துகல தெரிவித்தார். இது தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு ஒப்படைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு பரிசீலனை செய்து வருவதாகவும் பணிப்பாளர் முதுகல மேலும் தெரிவித்தார்.

சாக் விளையாட்டு விழாவின் போது நடைபெற்ற ஆண்களுக்கான கைப்பந்தாட்ட போட்டி அரையிறுத்தி போட்டியில் இலங்கை அணி 3--1 செட் கணக்கில் தோல்வியுற்றது. முதல் செட்டில் இலகுவாக வெற்றி பெற்ற இலங்கை அணி அடுத்து இரு செட்களையும் போட்டியே இல்லாமல் தோல்வியுற்றது. இதன் போது சில வீரர்களின் அசமந்தப் போக்கு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த கூறும் போது: விசேட விசாரணைப் பிரிவு எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு இயங்கவுள்ளதாகவும், அதன் விசாரணைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சோ அல்லது அதன் அதிகாரிகளோ தலையிட முடியாதென அரசியல் தலையீடு பற்றி ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் தெரிவித்தார். கிரிக்கெட் உட்பட மற்றைய விளையாட்டுத்துறையிலும் இடம்பெறும் ஊழல் மற்றும் சூதாட்டம் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் புதிய விசேட பொலிஸ் பிரிவுக்கு முறையிடலாம். குற்றங்கள் தொடர்பான சரியான தகவல்களைத் தருவோருக்கு பரிசில்களும் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முறையிடுவோர்களது விபரங்கள் வெளியிடப்படமாட்டாதெனவும் தெரிவித்தார்.

சொந்த காரணங்களையும் தனிப்பட்ட குரோதங்களையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி பிரிவுக்கு முறையிட்டால் முறையீட்டாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்ட ஆலோசகர் பண்டுக கீர்த்தினந்த தெரிவித்தார்.

விளையாட்டு தொடர்பான குற்றங்களை ஒழிப்பு சரத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு 10 வருட சிறைத் தண்டனை அல்லது 100 மில்லியன் ரூபா அபராதமும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இச்சரத்து கடந்தகால குற்றங்களுக்கு செல்லுபடியாகாதெனினும் தற்போதிலிருந்து இச்சட்டம் அமுலுக்கு வருகின்றது.

விளையாட்டின் கௌரவத்தையும், தொழில் ரீதியான விளையாட்டு வீரர்களின் சுயமரியாதையும் பாதுகாப்பதற்காகவும் இச்சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக விசேட விசாரணைப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜகத் பொன்சேகா ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

போட்டியை விட்டுக்கொடுத்தல், ஊழல், சட்டவிரோத செயல்கள், சூதாட்டம் போன்ற முக்கிய நான்கு பிரிவுகளில் தண்டனை வழங்கப்படும். இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதயில் நடைபெறும் குற்றங்களை சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்பு பிரிவினரின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டு அமைச்சின் சட்ட ஆலோசகர் பண்டுக கீர்த்தினந்த மேலும் தெரிவித்தார்.

விசாரணைப் பிரிவை நடாத்துவதற்கு 10 பேர் கொண்ட செயற்குழு அங்கத்தவர் குழுவொன்றை விரைவில் பெற்றுத் தரும்படி அதன் பிரதானி ஜகத் பொன்சேகாவால் பொலிஸ் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவர் அனந்தா கல்லூரியின் பழைய மாணவரும் சிறந்த றக்பி, பொக்சிங் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் குற்றவியல் தடுப்புப் பிரிவு திணைக்களத்தின் கடுநாயக்க விமான நிலையப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார். அப்போது இலங்கைக்கு அனுமதியின்றி வரவிருந்த 3000க்கும் மேற்பட்டோரை விசாரணை செய்து கைது செய்துள்ளார்.

இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இவரின் சிறந்த சேவையை கௌரவிக்கும் முகமாக நெதர்லாந்தில் நடைபெற்ற குற்றவியல் விசேட பயிற்சி முகாமில் விசேட பிரதிநிதியாக கலந்துகொள்ளும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...