கண்ணகி வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி 20 வருடங்களின் பின்னர் (08) மாலை நடைபெற்றது.

மகாவித்தியாலயத்தின் அதிபர் ரி.இராசநாதன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியின் நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக கண்ணகிராம இராணுவ முகாம் பொறுப்பதிகாரி டி.ஏ.எ.எஸ். குணரட்ன மற்றும் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலை அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கனகர் விளையாட்டுக்கழக வீரர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேன்ட் வாத்திய குழுவினரின் இசையோடு வரவேற்கப்பட்ட அதிதிகள் தேசிய கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதேநேரம் மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றதுடன் அதிதிகள் அணிநடை மரியாதையினை ஏற்றுக்கொண்டனர்.

இதேநேரம் இல்லங்களையும் அதிதிகள் பார்வையிட்டதுடன் வினோத உடைப்போட்டியும் கழகங்களுக்கான அஞ்சல் ஓட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன. இறுதியாக 314 புள்ளியினை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கம்பர் இல்லத்திற்கும் முறையே வள்ளுவன் பாரதி இல்லத்திற்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், நினைவுச்சின்னங்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்


Add new comment

Or log in with...