ஒரு பயங்கரப் போரின் இறுதி மூச்சு

மீண்டும் இத்லிப் நகரா! சிரிய உள்நாட்டு யுத்தமும் இந்த இத்லிப் பெயரும் அலுத்துப்போன ஒன்று. ஆனால் சிரியாவின் பஷர் அல் அஸாத் அரசை பொறுத்தவரை இத்லிப் என்பது முற்றுப்புள்ளி, கிளர்ச்சியாளர்களுக்கு இருப்புக்கான போராட்டம், இடையே துருக்கியின் சதுரங்க ஆட்டத்தில் இத்லிப் என்பது ராஜா.  

வட மேற்கு சிரியாவில் துருக்கி எல்லையை ஒட்டிய இத்லிப் நகர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு எதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டம் வெடித்து அது கிளர்ச்சியாக மாறியபோது அரச எதிர்ப்பாளர்களிடம் வீழ்ந்த முதல் நகரம். பின்னர் சிரிய போரில் இத்லிப் என்பது கிளர்ச்சியாளர்கள் கோட்டை, அங்கு அரச படை அதிகம் சீண்டுவதில்லை.  

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஈரான் போராளிகள் மற்றும் ரஷ்ய வான் தாக்குதல்களின் உதவியோடு சிரிய இராணுவத்திற்கு கடந்த ஒருசில ஆண்டுகளில் ஒரே ஏறுமுகம்தான். சிரிய வரைபடத்தை பார்த்தால் துருக்கி எல்லையை தவிர்த்து ஒட்டுமொத்த சிரியாவும் அஸாத்தின் காலடியில் வீழ்ந்துவிட்டது. 

இப்போது இத்லிப் தான் பாக்கி, ஆனால் அது இலகுவான காரியமல்ல. சிரிய கிளர்ச்சியாளர்களின் ஒட்டுமொத்த சாரமும் இத்லிப்பில் குவிந்து கிடக்கிறது. மறுபக்கம் துருக்கி அங்கே முகாமிட்டிருக்கிறது. எனவே இத்லிப் போர் என்பது சிரிய போரின் உச்சம்.  

இத்லிப்பில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு துருக்கியும், ரஷ்யாவும் உடன்பட்டு அங்கே யுத்த சூனிய வலயம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதனைக் கண்காணிக்கவே துருக்கி இத்லிப்பில் 12கண்காணிப்பு முகாம்களை அமைத்திருக்கிறது.  

ஆனால் இது எதனையும் பொருட்படுத்தாத சிரிய இராணுவம் இத்லிப்பில் தீவிர யுத்தத்தை முன்னெடுத்திருக்கிறது. அங்கே பொதுமக்கள் மீதும் வான் தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்களை நடத்துகிறது. துருக்கியை சீண்டும் வகையில் நடத்திய தாக்குதல்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் 13துருக்கி படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  

பதில் தாக்குதல்களை நடத்தும் துருக்கி அங்கே மேலதிக துருப்புகளை குவிக்க ஆரம்பித்திருக்கிறது.  

இத்லிப்பை விட்டுக்கொடுக்க துருக்கி தயாரில்லை. சிரிய அரச படையும் பின்வாங்குவதாக இல்லை. பெப்ரவரி இறுதிக்குள் சிரிய இராணுவம் பின்வாங்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் கெடு விதித்திருக்கிறார். இல்லாவிட்டால் இரண்டாம் கட்டத் திட்டம் மூன்றாம் கட்டத் திட்டம் பற்றி துருக்கி எச்சரிக்கிறது.  

துருக்கிக்கு சிரியாவில் யுத்தம் செய்வது பழகிப்போய்விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிரிய குர்திஷ்கள் மற்றும் இஸ்லாமி அரசு குழுவுக்கு எதிராக வடக்கு சிரியாவில் துருக்கி நான்கு யுத்தங்களை செய்திருக்கிறது.  

எனவே சிரிய இராணுவம் மற்றும் துருக்கி அரசுக்கு இடையே இத்லிப்பில் ஒரு நேரடி போர் மூழ்வதற்கு அனைத்துப் பொருத்தங்களும் சாதகமாகவே இருக்கின்றன. 

இத்லிப் போர் என்பது சராசரியான ஒரு போர் அல்ல. அது பிராந்தியத்திலேயே மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தக் கூடியது.  

துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாத் போராளிகளுக்கு எதிராகவே சிரிய அரச படை தற்போது இத்லிப்பில் நேரடி சண்டையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் இங்கு தாக்குதல்கள் உக்கிரமடைந்தபோது நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்தார்கள். 

வான் குண்டுகள், செல் வீச்சுகள், நேரடி துப்பாக்கிச் சூடுகள் என்று பொதுக்கள் வசிக்கும் பகுதி எங்கும் நாளாந்தம் பஞ்சமின்றி தாக்குதல் இடம்பெறுகின்றன. வெளியேற மக்கள் முண்டி அடிப்பதால் வீதி எங்கும் வாகன நெரிசல். மூட்டை முடிச்சுகளுடன் ஓட்டம்பிடிக்கும் மக்கள்.  

என்ன பிரச்சினை என்றால் கடந்த ஒரு தசாப்த கால சிரிய யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் கடைசியில் இத்லிப்பில் தான் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன் இத்லிப்பின் மக்கள் தொகை ஒன்றரை மில்லியன். ஆனால் இப்போது அங்கே மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்த அகதிகள்.  

கடந்த காலங்களில் சிரிய யுத்தம் தீவிரம் அடைந்த அலெப்போ, ஹமா, ஹோம்ஸ் ஏன் தலைநகர் டமஸ்கஸில் இருந்து கூட மக்கள் இங்கே இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.  

இப்போது இத்லிப்பிலும் போர் என்றால் அவர்கள் எங்கே தான் போவது. இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் துருக்கி எல்லையில் முகாமிட்டிருக்கிறார்கள். மேலும் பலர் அங்கங்கே தப்பியோடி வெட்ட வெளிகளில் தங்குகிறார்கள். வான் தாக்குதல் ஒரு பக்கம் இருக்க தாங்க முடியாத குளிர், மழை என்று இவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருப்பதே பெரும் போராட்டம்.  

முன்னர் என்றால் அகதிகள் இலகுவாக எல்லையைத் தாண்டி துருக்கிக்கு சென்றார்கள். ஆனால் இப்போது அந்த எல்லை மூடியிருக்கிறது.

ஏற்கனவே துருக்கியில் மூன்று மில்லியன் சிரிய அகதிகள் இருக்கிறார்கள். இன்னும் எம்மால் ஏற்கமுடியாது என்று துருக்கி கைவிரித்துவிட்டது.  

இந்த அகதிகள் படையெடுப்பை தடுப்பதற்குத்தான் இத்லிப்பில் சிரிய அரச படையுடன் துருக்கி மல்லுக்கட்டுகிறது. இத்லிப்பில் யுத்தம் தீவிரம் அடைந்தால் வரப்போகும் அகதிகளின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டிவிடலாம். அதனை சமாளிக்க யாராலும் முடியாது. அது பெரும் அவலத்தை ஏற்படுத்தும்.  

துருக்கி இத்லிப் மீது கவலைப்படுவதற்கு வரலாற்றுக் காரணங்களும் இருக்கின்றன. உஸ்மானிய பேரரசில் அலெப்போ நிர்வாகத்தை ஒட்டியே இந்த இத்லிப்பும் இருந்தது.  

முதலாவது உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட துருக்கி சுதந்திரப் போரில் முஸ்தபா கமால் அதாதுர்க் தலைமையிலான தேசியவாதப் படை தேசிய ஒப்பந்தம் ஒன்றை பிரகடனம் செய்தது. அதில் துருக்கி நாட்டு எல்லைக்குள் உஸ்மானிய அலெப்போ நிர்வாகப் பகுதியும் வடக்கு ஈராக்கின் மொசூல் பிராந்தியமும் உள்ளடக்கப்பட்டிருந்தன.  

ஆனால் 1921இல் பிரான்ஸின் கோரிக்கைக்கு அமைய துருக்கி கைச்சாத்திட்ட அங்கார ஒப்பந்தத்தில் அலெப்போ நிர்வாகத்தின் சில பகுதிகள் பிரான்சிடம் செயன்றதோடு, முதலாவது உலகப் போருக்குப் பின்னர் சிரியா உருவாக்கப்பட்டபோது அந்த நிலம் சிரியாவுக்குள் அகப்பட்டுக் கொண்டது.  

என்றாலும் அலப்போ மீதான துருக்கியின் ஆசை இன்றும் தணியவில்லை. இத்லிப்பை சிரிய அரசிடம் விட்டுக்கொடுத்தால் அடுத்து அலெப்போவில் கைவைக்கும் என்பது துருக்கிக்குத் தெரியும்.  

சிரிய யுத்தம் என்பது ஒரு தசாப்தம் பழசு. அதனைப் பற்றி விறுவிறுப்பான பேச்சுகள் இப்போது சர்வதேச அரங்கில் இடம்பெறுவதில்லை. இந்த நிலையில் இத்லிப் என்பது சிரிய உள்நாட்டுப் போரின் முடிவுப் புள்ளியாகக் கூட இருக்கலாம். ஆனால் அது கொடியதும் மிக நீண்டதுமான பயங்கரப் போராகவே இருக்கும்.

எஸ். பிர்தெளஸ்


Add new comment

Or log in with...