சஜித் பிரேமதாசவின் தேசிய கூட்டணி விண்ணப்பம் அங்கீகரிப்பு

சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய கூட்டணியை கட்சியாகப் பதிவு செய்யும் விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்திருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (11)அறிவித்துள்ளார்.  

புதிய கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் போது National Power என வருவதால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாதகமானதாக அமையும் என அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டி புதிய கட்சியைப் பதிவு செய்ய வேண்டாமெனக் கோரி கடிதம் எழுதியுள்ள நிலையில் அதனைப் பரிசீலித்த ஆணைக்குழுத் தலைவர் புதிய கட்சியின் ஆங்கில வாசகத்தில் தேசிய என்ற சொல்லை நீக்கி சமாதான மக்கள் சக்தி என வரும் விதத்தில் ‘சமகி ஜனபலய’ என்று கருத்துப்பட பயன்படுத்துமாறும் புதிய கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் திருத்தியமைக்கப்பட்ட பெயரின் கீழ் அக்கட்சியைப் பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.  

புதிய கட்சிப் பதிவு செய்யப்பட்ட போதிலும் கட்சிக்கான சின்னம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை புதிய கட்சியின் அடுத்தக் கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவிருப்பதாக அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.  

எம். ஏ. எம். நிலாம்    


Add new comment

Or log in with...