டீல் வைத்துள்ளவர்களே புதிய கூட்டணிக்கு எதிர்ப்பு

பொதுஜன பெரமுனவுடன் டீல் வைத்துள்ளவர்களே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படும் பரந்துபட்ட கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது அரசாங்கத்தின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தற்போதைய அமைச்சர்கள் பேசுகின்றனர். இந்த வாகனங்களை எமது வீடுகளுக்கு கொண்டுசெல்லவில்லை. குறித்த வாகனங்களை தற்போதுள்ள அமைச்சர்கள்தான் பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஆட்சியில் வாகன பேரணிகளுக்காக மாத்திரம் 300 கோடி செலவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2005- , 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இதனைவிட நான்கு மடங்கு வாகனங்கள் அன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ததை மறந்துள்ளனர். வாகனங்கள் அவசியமில்லையென்றால் அவற்றை விற்பனை செய்து திறைசேரிக்கு நிதியை அளிக்க முடியும்.

பொதுத் தேர்தலை ஒரு பரந்துபட்ட கூட்டணியொன்றின் மூலம் எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இதன் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டணியின் சின்னம் மற்றும் பெயரும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. கூட்டணியில் இணைந்துக்கொள்ளுமாறு அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். அரசாங்கம் கொண்டு செல்லும் மக்கள் விரோதமான செயற்பாடுகளுக்கு எதிரானவர்களும், பொதுஜன பெரமுனவுடன் டீல் வைத்துள்ளவர்களுமே சஜித்தின் கூட்டணியை காலால் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...