மாயை

அற்புதமான அந்த எழுத்தாளனுக்கு இலகுவில் எல்லாம் கைகூடி விடுகின்றன. இப்பொழுதெல்லாம் அவனுடைய எழுத்துக்கள் புவியினை சமப்படுத்துகின்றன. காலத்தின் மீது சீரிய பாய்ச்சலினை மேற் கொள்கின்றன. உண்மையாக அவன் எழுதுவதெல்லாம் நடந்து விடுகிறது. இதுவே ஆரம்பத்தில் அவனுக்கு மகிழ்வினைக் கொடுத்தாலும் பிறகு பெரும் சிக்கலினையும் தோற்று வித்திருக்கிறது. இப்படித்தான் ஒரு நாள் மழை வேண்டுமென்று எழுதிவிட்டான் ஊர் முழுக்க ஓ வென்ற பெருத்த மழை அவனால் எழுதி செப்பனிடப்பட்ட பெரும் தோட்டம் கோர மழையினால் முற்றிலும் சேதமாகிவிட்டது.

இதில் துரதிஷ்டம் யாதெனில் ஒரு முறை ஒரு விடயத்தை மட்டுமே எழுத முடியும் அது நிஜமாகவே மாறிவிடும். அதே விடயத்தினை இரண்டாவது தடவையாக எழுதினால் அது நடைபெறாது. இந்த அறியாமைதான் அவனால் ஒரு வருடத்திற்கு முன் எழுதி உருவாக்கி பராமரிக்கப்பட்ட அவனது தோட்டம் இன்று மழையினால் அழிக்கப்பட்டிருந்தது... 

ஏராளமான சொத்துக்களும் பண பலமும் கொண்ட எழுத்தாளனாக அவன் மதிக்கப்பட்டான். அவனது எழுத்துக்களை வேதங்களுக்கு ஒப்பானதாக மக்கள் போற்றினர். அவனது எழுத்தின் வருகைக்காக அனைவரும் காத்துக் கிடந்தனர்.

அவனது எழுத்துக்களின் மூலம் அவன் கடவுளானான் என்றனர் பலர். அவன் உயரப் பறந்து கொண்டிருந்தான். இந்த மாய எழுத்துக்களின் ரகசியத்தை அவன் யாரிடமும் கூறியதில்லை. ஒரு தடவை அவனுக்கு அமிர்தம் பருக வேண்டும் என்று தோன்றியது எழுதினான் அமிர்தம் வந்தது பருகி இன்பம் கண்டான். மனைவியானவள் தங்க, வைரங்கள் வேண்டும் என்றாள் எழுதினான் அவை வந்தன மனைவி அணிந்து மகிழ்ந்தாள். இப்படி எந்த எழுத்தாளனுக்கும் அமையாத ஒரு வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருந்தது. அவன் யதார்த்தங்களை மீறிய வாழ்வினை வாழ்ந்து கொண்டிருந்தான்... 

அன்று ஒரு நாள் அவனது மகள் ஒரு கட்டுரை வரைந்து கேட்டாள். அவனது வாழ்வினை குலுக்கிப் போடும் கட்டுரை அது. இதுவரை காலமும் சேமித்து வைத்திருந்த அவனின் எழுத்து மாயைகள் சிதறிப் போகின்ற கட்டுரை அது. மூன்றாம் உலக நாடுகளின் வறுமை| இதுவே கட்டுரையின் தலைப்பு.

பல முறை அவன் எழுத மறுத்தும் அவனுடைய சிந்தனை அந்தத் தலைப்பினை நினைக்க மறுத்த போதும் ஏதோ ஒரு மன உளைச்சல் அவனைத் தடுமாறச் செய்தது. எழுதிவிட்டான் மூன்றாம் உலக நாடுகளின் வறுமை பற்றி. அன்றிலிருந்து அவனுடைய செல்வங்களை இழக்கத் தொடங்கினான். வறுமை அவனைப் பீடித்துக் கொண்டது. அவனுடைய மாய எழுத்துக்கள் எல்லாம் ஒரு தடவை மட்டுமே தன்னுடைய ஜாலங்களை வெளிக்காட்டுவதால் பணம், பணம் என அவன் மீண்டும் மீண்டும் எழுதும் எழுத்துக்களால் எந்தப் பயனும் கிட்டவில்லை. இப்போது அவன் வறுமை எழுத்தாளன். நாளை மரணத்தில் வாழ்தல் எனும் தனது இறுதிக் கட்டுரையினை எழுத உத்தேசித்துள்ளான். தன் மாய எழுத்துக்கள் பயனற்றுப் போன நிலையில்.   


Add new comment

Or log in with...