கிழக்கு மண்வாசனையில் கிராமிய வசைக் கவிதைகள்

கிராமிய இலக்கிய வடிவங்களிலே வரகவிகளின் செல்வாக்கு முற்காலத்தில் செறிந்திருக்கின்றதை வரலாறுகள் கூறுகின்றன.   இலக்கியப் படிமங்கள் நிறைந்த கிழக்கு மண்ணில் அநேகமாக கவிகளாகலேயே சேய மக்கள் அன்று இருந்தனர். இன்றும் பல வரகவிகள் வாழ்கின்றனர். அது மண்வாசனையின் மரபு வழியானவை எனலாம்.  

பண்டைய இந்தியக் காளமேகப் புலவரின் வசைக் கவிப் பாணி இலங்கையில் கிழக்குப் பகுதியில் வியாபித்திருந்திருக்கிறது. 

வசைக்கவியின் ஒருசில காட்சிகள் கவனத்திற் கொள்ளச் சுவை ததும்புவனாவாகவுள்ளன.  

மச்சான் கவிபாடுகிறான். 

கன்னிமுகத்தழகி உன்னைக்

காணாது வாடியதால் 

உண்ணுற சோறும் ஒடம்புல ஒட்டாது. 

என்ற கவிக்குப் பதிலாக 

ஒட்டாத சோத்த உண்ணுறதில

பயனில்லை 

கொட்டிஉடு நாய்க்கு நன்றிக்கு

வாலாட்டும். 

என்று நச்சென்று தலைவி கூவுகிறாள் 

நித்திரை கொள்ள ஏலா

நெனவில நீ வந்து 

நெட்டி முறிப்பதுபோல் தோணுதுகா 

உடன் பதிலாக தலைவியின்

கவித்தொடராக 

சடுதியா என்ன எண்ணி 

நித்திரை மறுத்தாயெண்டா 

சொக்குச் சுருங்கி மச்சான் 

சுறுக்கா நீ கிழவனாவாய் 

என்று ரசணையான பதில் ஒலிக்கிறது. மச்சானின் மனதின் எண்ணப் பதிவுகளுக்கு வசைக்கவிகள் உந்தலாக உள்ளது. 

தின்னையில படுக்க ஒண்ணா 

தெள்ளுக் கடிக்குதுகா 

ஒரமாய் நான் படுக்க ஒரு 

உறுதி எப்ப கிடைத்திடுமோ 

என்ற வினாக்கவிக்கு விடையாக மச்சியின் கவிப்பதிலில் மச்சானின் மனதையும் ஆண்மையின் உயிரோட்டத்தையும் உசுப்பி விடுவதாக இக்கவி அமைகிறது.  

தெள்ளுக் கடித்தாலும் – மச்சான் 

தெரு நாய்கள் விரட்டினாலும் 

ரோசம் கழன்ட மச்சான் – ஒன்ட 

மீசையில வேலையில்ல. 

இக்கவி ஆணின் வீரத்துக்குச் சவாலாக அமைகிறது.  

அந்தக் கால இளைஞர்களின் சட்டைப் பையினுள்ளே வெள்ளிநிறச் சீப்பு இருக்கும். தலையிலே எண்ணை சளிக்கத் தடவி அலையாகத் தலைவாருவது நாகரிகத்தின் அழகியல் தன்மையாக விளங்கியது. வீதியால் போகும்போதும் தான் விரும்பும் பெண்ணின் வீட்டு எல்லைகளில் நடமாடும்போதும் தலைமுடி சரிசெய்யும் ஒருவகையான வாலிப நோயகாக அக்காலம் விளங்கியது. எனவே இக்காட்சியின் வசைக்கவி இப்படி அமைகிறது. 

அடிக்கடி தலை ஒதுக்கி 

அலங்காரம் செய்யும் மச்சான் 

அடி மொட்டை பளபளக்கும் 

அதுக்கென்ன செய்யலாமோ? 

ஊமத்தங் கோழிபோல 

உறுமிக்கிட்டுப் போற மச்சான் 

ஊர்முழுக்க ரோட்டில நீ 

அளந்துதான் திரியிறாயோ? 

எனக் கிண்டல் கவிதனைக் கிளறி விடுவதைக் காணலாம்.  

உள்ளத்தால் உருவகித்து உருகிப் போகும் இளவல்கள ஆசை நோயினால் அலைக்கழியும் போது விரும்பாத ஒருவரை விகர்ப்பமாய்த் திட்டுவதையும் வியிலே சொல்லும் பாணி சுவை ததும்புவதாக அமைகிறது. மச்சான் கறுப்பாக இருப்பதால் அவனுக்காய்க் கவிபாடும் கன்னிகை வலிந்து கட்டளை பிறப்பிப்பதாக 

காக்கை நிறத்தழகா 

கருங்குரங்கு முகத்தழகா 

ஏக்கம் உனக்கெதற்கு – என்னை 

எட்டியும் பார்க்காதே. 

என்று வெறுப்பூட்டும் கவியமைப்பைக் காட்டுவது.  ஆண்மகனின் பெறுமதியைத் தாழித்துவதாகவுள்ளது.  

எனவே ஏக்க உணர்வின்   கவலையின் வெளிப்பாடாக இப்படிப் பாடி முடிக்கிறான். 

மஞ்சள் முகத்தழகி – எந்தன் 

மனம் நிறைந்த கண்ணழகி 

கொஞ்சும் குரலழகி உன்னைக் 

கெஞ்சுவதில் பலனில்லை 

என அவளை விரக தாபத்துடன் மனதிலிருந்து விலக்கிக் கொள்கிறான். இவ்வாறாகக் கிராமியக் கவிமரபில் இலக்கியம் பின்னிப் பிணைந்திருக்கின்றன. 

கவி மரபில் தலைவன் தலைவி மட்டுமின்றி பொதுவாக வசைக் கவிகள் சமுக நடைமுறைகளில் வீட்டுக்கு வீடு சண்டை வரும்போது கூடக் கவி நடை வசைப்பாடல் முக்கியம் பெற்றிருந்தது. ஒரு சமயம் கிழக்கைச் சேர்ந்த ஒரு பெண் தனது ஜிவனாம்சப் பணம் பெற நீதிமன்றுக்குச் சென்றிருக்கிறாள். அங்கே அலுவலக முதலியார் அவள் வந்த விடையத்தைக் கேளாது கவனியாமல் இருந்தபோது வசைப்பாடலாக விளித்ததைக் குறிப்பிடலாம். மனதில் கோபம் இருந்தபோதும் விகடமாக 

மொட்டைத் தலையழகா 

முதலிவேலை பார்க்கும் ஐயா 

இட்டமுடன் என்காசை 

எடுத்துத் தாரும் ஐயாவே 

நீதிவான் ஐயா எனக்கு 

நீதியாய்ப் பெற்றுத் தந்த 

கதியாக் காசை வவுச்சரிலே 

கெதியாயத் தந்தாலென்ன? 

என்று பாடியதும் முதலியார் நீடிக்க விடாமல் உடனடியாகப் பணத்தைப் பெற்றுக்கொடுத்தாராம் என்ற கதைகளும் உள்ளன. இதுபோன்ற சமூக ஊடாட்டம் கொண்ட பல வசைக்கவிகள் சுவை ததும்பும் இலக்கியங்களில் கிராமியக் கலைகளிலே காணக்கிடக்கிறது.  

கந்தளாய்
முஸ்தபா சகாப்தீன்...


Add new comment

Or log in with...