மூன்றாண்டுகளுக்கு பின்னர் மகுடம் சூடினார் செரீனா

நியூஸிலாந்தில் நடைபெற்ற ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு நிறைவுக்கு வந்துள்ளது.

மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், சகநாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 6–-3 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும், தனது ஆதிக்கத்தை தொடர்ந்த செரீனா வில்லியம்ஸ், 6-–4 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

கடந்த 2017ஆம் ஆண்டுக்கு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கையோடு தாய்மை அடைந்த செரீனா, ஓராண்டு டென்னிஸிலிருந்து ஓய்வில் இருந்தார்.

இதன்பிறகு களம் புகுந்த செரீனா, இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும், சம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

தற்போது சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு செரீனா வில்லியம்ஸ், முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.

ஆண்டில் தான் விளையாடிய முதல் தொடரிலேயே சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் உற்சாகமடைந்துள்ள செரீனா, அடுத்து நடைபெறவுள்ள ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்று சாதிக்கும் முனைப்பில் உள்ளார். 38 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை டென்னிஸ் உலகில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இன்னமும் ஒரு கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், அவுஸ்ரேலியாவின் முன்னாள் வீராங்கனையான மார்கரட் கோர்டின் 24 கிராண்ட்ஸலாம் பட்டங்கள் என்ற அதிகூடிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற சாதனையை சமன்செய்வார். செரீனா வில்லியம்ஸ், ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடரில் கிடைத்த 62,300 அவுஸ்திரேலிய டொலர்கள் பணப்பரிசை, அவுஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கினார்.


Add new comment

Or log in with...