ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் கைது

ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் கைது-Ranjan Ramanayake Arrested

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) மாலை மாதிவெலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற கொழும்பு குற்றத் தடுப்பு (CCD) பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் பிடியாணை பெற்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்ட மா அதிபரினால் CCD பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, நுகேகொட நீதிமன்றில் பிடியாணை உத்தரவை பெற்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்து, கொழும்பு குற்றத் தடுப்புப்பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர் நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் (14) ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி 04ஆம் திகதி சோதனை உத்தரவு அனுமதிக்கமைய, ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டுக்குச் சென்ற கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர், குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் நிதி மோசடி பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் தொடர்பான உரையாடல் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் வன்தட்டு (Hard Disk), பல இறுவட்டுகள் (CD), மடிகணனி (Laptop), கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் 127, சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெளிநாடு செல்லத தடை விதிக்கப்பட்டு, ஜனவரி 05ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...