உக்ரைன் விமானம் சுடப்பட்டதை எதிர்த்து ஈரானில் ஆர்ப்பாட்டம்

அரசுக்கு எதிராக கோசம்

உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பில் பொய் கூறியதற்கு எதிராக ஈரான் தலைநகர் டெஹ்ரான் வீதிகளில் அதிகாரிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறைந்தது இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“ஊக்கமளிக்கும்” ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவை வெளியிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

176 பேர் கொல்லப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து மூன்று நாட்களின் பின் அந்த விமானத்தை தவறுதலாக சுட்டதாக ஈரான் கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி ஒருசில மணி நேரத்திலேயே உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி பயணித்த இந்த விமானம் ஈரான் தலைநகருக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

ஈரான் குத்ஸ் படைத் தளபதி காசெம் சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்தது.

இந்த பயணிகள் விமானத்தில் ஈரான் மற்றும் கனடா நாட்டவர்கள் அதிகம் இருந்ததோடு உக்ரைன், பிரிட்டன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனி நாட்டவர்களும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இரு பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் விமானத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு தமது கோபத்தை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆயிரம் பேர் வரை கூடிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈரானிய தலைவர்களுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதாகவும் சுலைமானியின் படங்கள் கிழித்து எறியப்பட்டதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் மற்றும் அந்த சம்பவத்தை முதலில் மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

வீதிகளை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பிரிவினர் கலைந்துபோகச் செய்ததாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில், அப்போது கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனினும் சுலைமானியின் இறுதிச்சடங்கின்போது குவிந்த கூட்டத்தை விட இந்த எதிர்ப்பு போராட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் பங்கெடுத்தனர்.

இதேவேளை டெஹ்ரானில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈரானுக்கான பிரிட்டன் தூதர் ரொப் மேக்கைர் பங்கேற்றார். போராட்டக்காரர்களுடன் சேர்த்து பிரிட்டன் தூதரையும் கைது செய்த பாதுகாப்பு படையினர், சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, ஈரான் பகிரங்கமாக சர்வதேச விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.


Add new comment

Or log in with...