பெண் அரச ஊழியரைத் தாக்கிய அதிகாரிக்கு விளக்கமறியல்

அரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த பெண் உத்தியோகத்தரை தாக்கியதாகக் கூறப்படும் அரச உத்தியோகத்தரை இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ் (34) என்பவரை தாக்கிய சம்பவத்தில் 5 நாட்களாக தலைமறைவாகிய நிலையில் அதிகாலை (6) சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரியும் ஐ.எல்.ஏ. கார்லிக் என்பவர் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போது தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் அதன் விளைவுகளான போராட்டங்கள் இடம்பெறுதல், பொதுச்சொத்துக்கள் சேதமடைதல், இப்பிரச்சினை காரணமாக இனநல்லுறவு சீர்குலைதல் என பொலிசார் தமது வாதங்களை முன்வைத்து சந்தேக நபரின் பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு மன்றில் வேண்டினர்.

சந்தேக நபர் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...