Friday, April 26, 2024
Home » யாழ், சிவில் சமூக நிலைய தலைவருடன் ஜனாதிபதி பேச்சு

யாழ், சிவில் சமூக நிலைய தலைவருடன் ஜனாதிபதி பேச்சு

by damith
January 8, 2024 7:50 am 0 comment

வடமாகாணத்துக்கு, நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ். சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்தனுடன் சந்திப்பில் (06) ஈடுபட்டார்.

வடக்கின் சிவில் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட்டாலும் சாதிப் பிரச்சினையால் மக்கள் அவதிப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தை தவிர்த்து கொழும்பில் வாழும் அரசியல்வாதிகள் இப்பிரச்சினை குறித்து குரல் எழுப்பாதது வேதனைக்குரியது எனவும் அருண் சித்தார்த் சுட்டிக்காட்டினார். வடமாகாணத்தில் பல சாதிப் பாடசாலைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடையாது என்றும் சுட்டிக்காட்டிய அருண் சித்தார்த், அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இவ்வாறான நூறு பாடசாலைகளின் பெயர்களை முன்வைக்குமாறும் அப் பாடசாலைகள் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் யாழ்.சிவில் சமூக நிலையத்துக்கு ஜனாதிபதி உறுதியளித்தார். சாதிப் பிரச்சினைகளுக்காக மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத பிரதேச செயலகங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் என்று கூறிச் சங்கங்களை அமைத்துள்ள காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர், வெளிநாடுகளில் இருப்பதாக யாழ்.சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த், இச்சந்திப்பின் போது தெரிவித்தார். காணாமல் போனோர் சங்கங்களைச் சேர்ந்த எவருடனும் விவாதத்துக்கு தாம், தயாராக இருப்பதாகவும், அவர்கள் காணாமல் போனவர்கள் எனக் கூறி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் சித்தார்த் மேலும் குறிப்பிட்டார். யாழ். மக்கள் எதிர்நோக்கும் ஆனால் கவனத்தில் கொள்ளப்படாத பல பிரச்சினைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் யாழ் சிவில் சமூக நிலையத்தினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT