Friday, March 29, 2024
Home » தமிழ்நாட்டுக்கு வரும் போது எனக்குள் புதிய சக்தி பிறக்கிறது!

தமிழ்நாட்டுக்கு வரும் போது எனக்குள் புதிய சக்தி பிறக்கிறது!

by mahesh
January 3, 2024 7:00 am 0 comment

தமிழ்நாடு, திருச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரூபா 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை நேற்று தொடக்கி வைத்து உரையாற்றினார். அப்போது “வணக்கம்” என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார்.

திருச்சியில் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, “எனது தமிழ் குடும்பமே, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று தமிழில் பேசி உரையை தொடர்ந்தார்.

பிரதமர் மோடி கூறியதாவது:-

“25 ஆண்டுகளில் பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும். திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களைப் படைத்துள்ளனர். சி.வி. ராமன் போன்ற திறமையாளர்களை இந்த தமிழக மண் உருவாக்கியுள்ளது. 2024- ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூபா 20,000 கோடி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

2023- இல் மழைவெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். மழைவெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. கனமழை காரணமாக நமது சக மக்களை இழக்க வேண்டியிருந்தது. சொத்துக்கள் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நெருக்கடியான நிலையிலே தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு துணையாக உள்ளது”.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

இதேவேளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உரையாற்றுகையில், நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு அனுதாபமும் தெரிவித்தார்.

“நடிகர் விஜயகாந்த் சினிமா உலகின் கப்டன் மட்டும் அல்ல. அரசியலிலும் அவர் கப்டனாக இருந்திருக்கிறார். சினிமாவின் உதவியோடு அவர் மக்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். ஒரு அரசியல்வாதி என்ற முறையிலே அவர் அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்.

உலகில் நான் எங்கே பேசினாலும் தமிழ்நாட்டை, தமிழ்மொழி பெருமையை பேசுகிறேன். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினோம். தமிழ் மொழி கலாசாரம், மொழி தொடர்பான உற்சாகம் அதிகரித்துள்ளது. பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும்போது எனக்குள் புதிய சக்தி பிறக்கிறது.

உலகின் 5 ஆவது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது. ‘மேக் இன்’ இந்தியாவின் அடையாளமாக தமிழ்நாடு மாறுகிறது. மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இவ்விழாவில் 1528 மாணர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். “பாரதிதாசன் புதியதோர் உலகம் செய்வோம் என்று கூறியுள்ளார். இதுதான் உங்கள் பல்கலைக்கழக்த்தின் நோக்கமும் கூட. இந்தியாவை உலக நாடுகள் புதிய நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கின்றன. பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால்தான் நமது நாடும் சிறந்து விளங்கும். கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு, சகோதரத்துவம் நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும். பண்டைய காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவை கல்வியில் சிறந்து விளங்கின” என்று மோடி மேலும் குறிப்பிட்டார்.

திருச்சி வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT