Home » இலங்கையில் மதுபாவனையினால் தினமும் சுமார் 40 பேர் மரணம்!

இலங்கையில் மதுபாவனையினால் தினமும் சுமார் 40 பேர் மரணம்!

தினமும் 60 கோடி ரூபா மதுப்பிரியர்களால் விரயம்!

by mahesh
January 3, 2024 10:00 am 0 comment

“எமது நாட்டில் தினமும் சுமார் 40 பேர் வரை மதுசாரம் காரணமாக உயிரிழக்கின்றனர். ஒரு வருடத்தில் சுமார் 15000 பேர் மதுசாரத்தின் காரணமாக மரணிக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் தந்தைமார் மற்றும் கணவன்மார் ஆவர். இந்த நிலைமை காரணமாக அதிகமான பிள்ளைகள் தந்தையை இழக்கின்றனர். பெண்கள் தமது கணவனை இழப்பதன் காரணமாக நிர்க்கதி நிலைக்கு ஆளாகின்றனர். தினமும் சுமார் 60 கோடி ரூபாவை மதுபானத்துக்காக எமது நாட்டு மக்கள் செலவு செய்கின்றனர். மதுபானத்துக்கு மக்கள் செலவிடுகின்ற பணம் வெளிநாடுகளுக்கும் செல்கின்றது” என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய செயற்திட்டப் பணிப்பாளர் அமரநாத் தென்ன தெரிவித்தார்.

“அகால மரணங்களுக்கான பிரதான காரணம் தொற்றாநோய்கள் ஆகும். அது ஒட்டுமொத்த மரணங்களில் 70 வீதமாகும். தொற்றாநோய்களுக்கான நான்கு பிரதானமான காரணிகளில் மதுசாரமும் ஒரு காரணியாகும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மதுசாரத்தினால் கிடைக்கின்ற மதுவரி வருமானத்தை விடவும் மதுசாரத்தின் காரணமாக ஏற்படும் மறைமுக பொருளாதார பாதிப்பு அதிகமாகும் என்பது ஆய்வுகளிலிருந்து புலப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் ரூபா 105.234 மில்லியனாகும். அந்த ஆண்டில் மதுசாரம் காரணமாக அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான பாதிப்பு ரூபா 119.660 மில்லியனாகும்.

வறிய குடும்பங்களில் உள்ளோர் தங்களது வருமானத்தில் மூன்றிலொரு பங்கினை மதுபானத்துக்காக செலவிடுகின்றனர். நாட்டில் அதிகளவிலான மதுபானசாலைகள் வறிய மக்கள் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. மதுசாரம் மனித உடலுக்கு எந்தவிதத்திலும் ஒவ்வாதது என்பது விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், சிரோசிஸ், சிறுநீரக பாதிப்பு, இருதய பாதிப்பு போன்ற பல நோய்களுக்கு மதுசார பாவனை நேரடியான காரணமென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மதுசார இரசாயனம் மனித உடலில் பாதகமான அழுத்தத்தினை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. மதுசார பாவனையால் அதன் பாவனையாளர்கள் மாத்திரமின்றி குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.

வாகன விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதற்கு மதுசார பாவனை காரணமாக அமைகின்ற அதேவேளை பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் மதுசாரம் காரணமாக அமைகின்றது. மதுசார பாவனையால் மனிதனுக்கு, குடும்பத்திற்கு அல்லது நாட்டிற்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாது. அதன் மூலம் மதுசார கம்பனிகளுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. மதுசார உற்பத்திக்காக அரிசி, குடிநீர் ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதுசார பாவனையிலிருந்து விடுபடுதல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட வேண்டும்”.

இவ்வாறு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய செயற்திட்டப் பணிப்பாளர் அமரநாத் தென்ன தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் விளக்கமூட்டும் செயலமர்வு கிரெஸ்டன் பார்க் உணவகத்தில் அண்மையில் நடைபெற்ற போது குறித்த தகவல்களை அமரநாத் தென்ன தெரிவித்தார்.

மதார் தம்பி ஆரிப் (அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT