20 மாநிலம்: 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு | தினகரன்

20 மாநிலம்: 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

4 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் முடிவு

நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் மே 19ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. சில மாநிலங்களில் இதனுடன் சட்டசபை இடைத்தேர்தல்களும் நடைபெற இருக்கிறது. மே 23ஆம் திகதி தேர்தல் வாக்குகள் எண்ணப்படும்.

முதல் கட்டமான நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக இருவர் கைது

பிரகாசம் மாவட்டம் பல்லிக்குருவா மண்டலில் உள்ள வேமாவரம் கிராமத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

கடப்பாவில் 126வது வாக்கு சாவடியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். கடப்பாவில் உள்ள இந்த வாக்குச்சாவடி பூட்டப் பட்டு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

நர்ஸராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் வேட்பாளர் அரவிந்த பாபு மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

குண்டூர் மாவட்டத்தில் ஈவிஎம் வேலை செய்யாததால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்டு பிறகு இயந்திரம் மாற்றப்பட்டது.

பிரகாசம் மாவட்டத்தில் 3260 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் நூற்றுக்கணக்கான ஈவிஎம் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இயந்திரங்களை மாற்றி வைத்தவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது.

அதே போல் குப்பம் பகுதியிலும் ஈவிஎம் இயந்திரங்கள் பல கோளாறு அடைந்துள்ளன. குப்பம் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும்.

கடப்பா நகரில் 163வது வாக்குச்சாவடியில் ‘விசிறி’ சின்னத்திற்கு எதிராக உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டது. அதே போல் இன்னொரு வாக்குசாவடியில் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க முடியவில்லை. இதனையடுத்து இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

இதே போல் அனந்தபூர், மங்களகிரி உட்பட பல சாவடிகளில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சிறு தகராறுகள் ஏற்பட்டன. பிறகு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. சில இயந்திரங்களில் கட்சியின் சின்னங்கள் சரியாகவே தெரியவில்லை என்ற புகார்களும் எழுந்தன.

130 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்திய நாட்டின் பொதுத் தேர்தல் இதுவாகும்.

இந்த வருடம் நடைபெறும் தேர்தலில் 90 கோடி பேர் வாக்கு அளிக்க உள்ளனர். ஐரோப்பா மற்றும் பிரேசிலில் உள்ள மொத்த மக்கள்தொகையைவிட இந்தியாவின் பொதுத் தேர்தலில் வாக்கு செலுத்துவோரின் மக்கள் தொகை உள்ளது. இது 2014 பொதுத் தேர்தலில் வாக்கு செலுத்தியவர்களை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

43.2 கோடி பெண்கள் இந்த முறை வாக்கு செலுத்த இருக்கின்றனர். 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி இளைஞர் இந்த முறை தேர்தலில் வாக்கு செலுத்த காத்திருக்கின்றனர்.

நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளில் 1,279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் அதில் 7 சதவீதம்தான் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 668 பேர் மட்டும்தான் பெண் வேட்பாளர்கள் என்பது கவலைக்குரியது. இந்த வருடமும் இந்த நிலைதான் பின் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முற்போக்குக் கட்சிகள் என்று சொல்லும் சில கட்சிகளும் கூட அதிகமான பெண் வேட்பாளர்களை நிற்பாட்ட தயங்குகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு, தேர்தலை சரிவர நடத்துவதற்காகவே 300 முழுநேர அதிகாரிகள் இந்த அமைப்பில் வேலை பார்க்கிறார்கள். இந்த அமைப்பின் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. மக்களவையில் உள்ள 545 உறுப்பினர்களில் 543 பேருக்காகதான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களை ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சார்ந்தவர்களுக்காக ரிஸர்வ்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை குஜராத்திலுள்ள வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்டு 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். இதுதான் கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆகும்.

 


Add new comment

Or log in with...