Friday, March 29, 2024
Home » JN.1 புதிய கொவிட் பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு அவதானத்துடன்

JN.1 புதிய கொவிட் பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு அவதானத்துடன்

- கொவிட் சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றவும்

by Rizwan Segu Mohideen
January 2, 2024 8:12 pm 0 comment

– அடுத்த வாரம் முதல் தட்டம்மையை கட்டுப்படுத்த தடுப்பூசி

இந்தியாவில் பதிவாகியுள்ள JN.1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த கொவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் நாடுமுழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண,

இந்நாட்டு மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் கீழ், உயர் தரத்திலான மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கொவிட் நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது, நாட்டின் நிதி நிலை சீராக முன்னேறி வருவதால், அத்தியாவசிய மருந்துகளை பெற, அரசின் கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்கான செயல்முறையை வெளிப்படையானதாக மாற்றும் நோக்கத்துடன், கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கத் தேவையான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக கொழும்பு மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களின் கணனிப் பிரிவுகளின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் குறித்த கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் , இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஔடதக் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தர ஆய்வு கூடத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் கொள்திறன், மனித வளம் மற்றும் அதன் கட்டமைப்பு மாற்றங்களை இந்த வருடத்தில் மேற்கொள்ள முடியும்.

மேலும், இந்நாட்டுக்குத் தேவையான 850 வகையான அத்தியாவசிய மருந்து வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. அந்த மருந்துகளில் மக்களின் உயிர் காக்கும் அனைத்து மருந்துகளும் எங்களிடம் உள்ளன. கண்களுக்குத் தேவையான லென்ஸ்கள், இதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்கள் (ஸ்டென்ஸ்), எலும்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

கடந்த வருடம் டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையான நிலை. டெங்கு நோயை அரசாங்கத்தினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உதவியுடன் சூழல் சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

தட்டம்மை நோயை ஒழித்துள்ள நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை அடையாளங்கண்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் சுமார் 700 அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சில காரணங்களால், தட்டம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவாக உள்ளதால் தற்போது நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதன்படி, ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக நோய்த்தடுப்பு தடுப்பூசியை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தட்டம்மை நோயை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பேற்றோரை கேட்டுக் கொள்கிறோம்.

இது தவிர, இந்தியாவில் பதிவாகிவரும் புதிய JN1 கொவிட் பிறழ்வு குறித்து இந்நாட்களில் எமது நாட்டிலும் கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது. தற்போது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபடி, இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். JN1 கொவிட் பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன், இது தொடர்பாக மாதிரி சோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்தியாவில் பதிவாகியுள்ள புதிய கொவிட் பிறழ்வு கொண்ட நோயாளிகள் யாரும் பதிவாகவில்லை. ஆனால் கடந்த கொவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.” என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT