நபிகளாரின் விண்ணுலக யாத்திரை கற்றுத்தரும் படிப்பினைகள் | தினகரன்

நபிகளாரின் விண்ணுலக யாத்திரை கற்றுத்தரும் படிப்பினைகள்

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையானது ஓர் அதிசய நிகழ்வாகும். ஓர் அற்புதமாகவும் மாத்திரமின்றி பல தத்துவங்களையும், தாத்பரியங்களையும் தன்னகத்தே பொதிந்ததாகவும் அடிப்படையான பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

நபியவர்களின் இவ்விண்ணுலக யாத்திரை இரு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணம் அதன் முதற் கட்டமாகும். அதனை அல் இஸ்ரா என வழங்குகிறோம். இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நபியவர்கள் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அமைந்தது. இதுவே மிஃராஜ் எனப்படுகிறது. இந்த யாத்திரையின் முதற் கட்டத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது.

"(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான்." (அல் குர்ஆன்)

நபியவர்களின் இப்புனித யாத்திரை முஸ்லிம்களின் இரு முக்கிய தலங்களுடன் தொடர்புற்று இருப்பதைக் காண முடிகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமும், அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமே இவ்விரு புனித ஸ்தலங்களாகும்.

இஸ்ராவும் இஸ்லாத்தின் பூர்வீகமும்

நபிகளாரின் விண்ணுலக யாத்திரை இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு இறை வழிகாட்டலும், வஹியும் இறங்கிய தலமான அல்மஸ்ஜிதுல் ஹராமுடன், மூஸா (அலை),ஈஸா (அலை) போன்றோருக்கும் இறைத்தூது கிட்டிய இடமான மஸ்ஜிதுல் அக்ஸாவுடனும் தொடர்புற்றுள்ளது. இது உணர்த்தி நிற்கும் உண்மை என்ன, இவ்விண்ணுலக யாத்திரையில் இவ்விரு இடங்களும் தொடர்புபட்டுள்ளதன் தத்துவம் யாது என்பன நோக்கத்தக்கவை.

உண்மையில் இந்த யாத்திரை  குறித்த இரு தலங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டதன் மூலம் உணர்த்தப்படும் ஒரு பேருண்மை இருக்கிறது. அவ்வுண்மை யாதெனில், நபி (ஸல்) அவர்கள் நூதனமாகத் தோன்றிய ஒரு நபியல்ல. அவர் கொண்டு வந்துள்ள மார்க்கமும் புதியதொன்றல்ல. மாறாக, எந்த அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து நபி (ஸல்) அவர்கள் தனது விண்ணுலக யாத்திரையைத் துவங்கினார்களோ அதே இடத்தில் தமக்குரிய இறைத்தூதைப் பெற்ற முன்னைய தூதர்களான இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரும் நபியவர்கள் எந்த அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை தனது பயணத்தில் கடந்து சென்றார்களோ அதில் வைத்து, அதன் சூழலில் இறை வழிகாட்டலைப் பெற்ற மூஸா (அலை),ஈஸா (அலை) உட்பட இன்னும் பல இறைத் தூதர்களும் போதித்த அதே மார்க்கத்தையே முஹம்மத் (ஸல்) அவர்களும் போதித்தார்கள் என்ற உண்மையே இங்கு போதிக்கப்படுகிறது. இந்த வகையில் அல் இஸ்ராவை நினைவுகூரும்போதெல்லாம் மதம், இறை வழிகாட்டல் பற்றிய இந்தப் பேருண்மையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகில் தோன்றிய அனைத்து இறை தூதர்களும் ஒரே வரிசையில் வந்தவர்கள். ஒரு கட்டடத்தின் கற்கள். அவர்கள் போதித்த மார்க்கம் ஒன்றே. அது இஸ்லாமாகும். அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருந்தனர் என அல்குர்ஆன் கூறும் ஓர் அடிப்படை உண்மையைச் சுட்டிக் காட்டுவதாக அல் இஸ்ரா அமைந்தது.

இப்ராஹீம் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மாறாக தூய்மையான முஸ்லிமாகவே இருந்தார். (3:67)

இஸ்ராவும் மிஃராஜும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கௌரவமாகவம் அமைந்தது. அண்ணாரை அல்லாஹ் இக்குறுகிய உலகத்திலிருந்து பரந்து விரிந்த வானுலகம் நோக்கி உயர்த்தி தன் சன்னிதானம் வரை வரவழைத்து கௌரவித்தான். பல அற்புதக் காட்சிகளையும் அன்னாருக்கு காண்பித்து கௌரவித்தான்.

அனைத்துக்கும் மேலாக நபியவர்கள் மேற்கொண்ட இவ்விண்ணுலகப் பயணம் அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒரு பெரும் பயிற்சியாக அமைந்தது. அல்லாஹுத்தஆலா அன்னாரை இந்த யாத்திரையின் மூலமாக உடல், உள, சிந்தனா ரீதியாக பலப்படுத்தினான். தனது தூதின் பளுவை சுமப்பதற்கும், தொடர்ந்து இடம்பெறவிருக்கம் ஹிஜ்ரத்தின் சிரமங்களைச் சகிப்பதற்கும், இனி வரும் அறப்போராட்டங்களின் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்வதற்கும் தேவையான மனோவலிமையையும் ஆன்மீகப் பலத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். இந்த வகையில் இஸ்ராவும், மிஃராஜும் நபியவர்களுக்கு முழு அளவில் வழங்கப்பட்ட பயிற்சியாக அமைந்தன.

மிஃராஜ் ஒரு பரீட்சை

மிஃராஜ் சம்பவமானது அன்றிருந்த உண்மை முஃமின்களை பிரித்தறிவதற்கும், போலிகளை இனங்காண்பதற்கும், உறுதியான ஈமானைப் பெற்றிருந்தோரையும் ஈமானில் பலவீனர்களாக இருந்தோரையும் நபிகளார் அறிந்து கொள்ளவும் துணை புரிந்தது. இவ்வுண்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் கீழ்வருமாறு கூறுகிறான் :

நபியே! நாம் (இஸ்ரா, மிஃராஜின் போது) உமக்குக் காட்டிய காட்சிகளை மக்களுக்கு (அவர்களின் ஈமானை அறிய) ஒரு பரீட்சையாகவே அமைத்தோம். (17:60)

உண்மையில் ஹிஜ்ரத்துக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு  இடம்பெற்ற இஸ்ராவும், மிஃராஜும் தொடர்ந்து வர இருக்கும் நிலைமைகளுக்கு முகங் கொடுக்க தன்னுடன் இருப்பவர்கள் தயாரானவர்களாக இருக்கிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நபிகளாருக்கு துணை புரிந்தது.

இஸ்ராவையும், மிஃராஜையும் முடித்துக் கொண்டு திரும்பிய நபி (ஸல்) அவர்கள் அதனை அடுத்த நாள் காலையில் மக்கள் மத்தியில கூறவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நபியவர்கள், தான் நேற்றிரவு மக்காவில் இருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வானுலகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் நேற்றிரவே மீண்டும் திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களை பொய்ப்பிப்பதற்கு தங்களுக்கு நல்லதோர் ஆதாரம் கிடைத்து விட்டதாக கருதியமையே காபிர்களது ஆனந்தத்திற்குக் காரணமாக அமைந்தது. இச்சம்பவத்தை வைத்தே முஹம்மதின் தோழர்களையும் அவரின் வலையில் விழ இருப்போரையும் இலகுவில் பலவீனப்படுத்தி முஹம்மதை  விட்டும் அவர்களைப் பிரித்து தூரமாக்கி விட முடியும் என அவர்கள் மனப்பால் குடித்தனர். நபியவர்கள் மிஃராஜ் சென்றதைக் கூறிய மாத்திரத்தில் சிலர் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் சென்றனர்.

உமது நபி நேற்று இரவோடிரவாக விண்ணுலகம் போய் வந்ததாகப் பிதற்கிறாரே? இதனையும் நீர் நம்புவீரோ! என ஏளனமாகக் கேட்டனர். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் அளித்த பதில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதைவிடப் பாரதூரமான செய்தியை அவர் கூறிய போது நான் அவரை நம்பவில்லையா? இறைவனிடம் இருந்து தனக்கு வஹி வருவதாக அவர் கூறினாரே! அதனையே நம்பிய நான் ஏன் இதனை நம்பக் கூடாது? அன்னார் இதனைக் கூறியிருந்தால் நான் இதனை எத்தகைய சந்தேகத்துக்குமிடமின்றி நம்புபவனாகவே இருப்பேன், என்றார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் உட்பட ஏனைய முஃமின்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது நபிகளாருக்கு பெரும் திருப்தியைக் கொடுத்தது. தம் முன்னே காத்திருக்கும் பணிகளைச் செவ்வனே மேற்கொள்வதற்கும் இந்தப் பாதையில் தாம் எதிர்நோக்கவிருக்கும் சோதனைகளை எதிர்நோக்குவதற்கும் உரிய வலிமையைப் பெற்ற மனிதர்கள் பலர் தம்முடன் இருப்பதை நபியவர்கள் இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

மிஃராஜின் பரிசு

மிஃராஜின் இரவிலே தான் ஐங்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்திற்குச் சென்ற இறைத்தூதருக்கு அவன் அளித்த சன்மானமாக தொழுகை அமைந்தது. அல்லாஹ் அதனை ஏனைய சன்மார்க்கக் கடமைகள் போன்று இப்பூவுலகில் வைத்து விதியாக்காது உயர்ந்த மலக்குகள் மத்தியில் வானுலகில் வைத்து கடமையாக்கினான். அந்தப் பரிசை தன் தூதருக்கும் தனது அடியார்கள் அனைவருக்குமான நிரந்தர நிலையான மிஃராஜாகவும் ஆக்கி வைத்தான். தன்னோடு தனது நபியவர்கள் விரும்பும்போதெல்லாம் உரையாடுவதற்கான ஊடகமாகவும் தொழுகையை அமைத்து வைத்தான்.

தொழுகையை நிலைநாட்டுங்கள். அதனை விட்ட முஷ்ரிக்குகளாக ஆகி விடாதீர்கள். (30:31)

என அல்குர்ஆன் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :

ஈமானுக்கும் குப்ருக்கும் இடையிலுள்ள தடை தொழுகையாகும். (முஸ்லிம்)

மிஃராஜ் வழங்கிய சொத்தான தொழுகை நபிகளாருக்கு அனைத்திலும் பிரியமான ஒன்றாக அமைந்திருந்தது.

'தொழுகையில் தான் எனக்குக் கண்குளிர்ச்சி உள்ளது' (நஸயீ) என நபியவர்கள் கூறினார்கள். புனித மிஃராஜ் நினைவுகூரும் போதெல்லாம் மிஃராஜின் பரிசாக அமைந்த தொழுகையின் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டும். அதனை சீர் செய்து கொள்ள வேண்டும் என உறுதி கொள்வோமாக.

                                    


Add new comment

Or log in with...