பசியால் துடித்த சிசுவுக்கு பாலூட்ட வந்த ஒன்பது தாய்மார்கள் | தினகரன்

பசியால் துடித்த சிசுவுக்கு பாலூட்ட வந்த ஒன்பது தாய்மார்கள்

சிவனொளிபாதமலை செல்லும் வழியில், தாயிடமிருந்து அந்நியப்பட்டிருந்த எட்டு மாத சிசு பசியால் துடித்தழுதபோது, அதற்குப் பாலூட்டுவதற்காக ஒன்பது தாய்மார்கள் முன்வந்த நெஞ்சை நெகிழ வைத்த சம்பவமொன்று நல்லதண்ணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

அதிக குளிர் காரணமாக இந்தக் குழந்தையின் தாய், தாம் சென்றிருந்த பஸ் வண்டிக்குள்ளேயே தன் குழந்தையைத் தன் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு மலையேறச் சென்றுள்ளார். அவர் சென்று பத்து மணித்தியாலமாகியும் வராததால், குழந்தை பசியால் அழுதுள்ளது.

அப்போது அந்தக் குழந்தைக்கு ஒன்பது பெண்கள் பாலூட்ட முன்வந்துள்ளனர். 

மத்துகமவைச் சேர்ந்த தாயொருவரின் எட்டுமாத சிசுவுக்கே, ஒன்பது தாய்மார்கள் இவ்வாறு, பாலூட்டுவதற்கு முன்வந்தனர். எனினும், நாவலப்பிட்டியைச் சேர்ந்த தாயொருவரே, அந்தச் சிசுவுக்கு பாலூட்டி பசியாற்றினார்.  

சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணாந்து தெரிவிக்கையில்,  சிவனொளிபாதமலைக்குச் செல்வதற்காக, தனது எட்டுமாத சிசுவுடன் வருகைதந்திருந்த தாய், அதிகளவிலான குளிர் நிலவியதால், தாம் சுற்றுலா வந்திருந்த பஸ்ஸிலேயே வைத்திருக்குமாறு, தன்னுடைய தாயாரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, மலைக்குச் சென்றுள்ளார். தாய், திரும்பி வருவதற்கு தாமதமானமையால், அந்தச் சிசு, பசியால் கதறியுள்ளது. என்ன செய்​வதென்று தெரியாத, அந்த பஸ்ஸிலிருந்த இன்னும் சிலர், அதுதொடர்பில் நல்லதண்ணி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.  

அதையடுத்து, ஒலிபெருக்கியின் ஊடாக, விவரத்தை அறிவித்த பொலிஸார், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் உதவியைக் கோரிநின்றனர். அதையடுத்து, அந்த  சிசுவுக்குப் பாலூட்டிப் பசியாற்றுவதற்காக, ஒன்பது தாய்மார்கள் முன்வந்துள்ளனர்.  

எனினும், அதற்கான பாக்கியம், நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த சுனித்தா என்பவருக்கே கிடைத்துள்ளது. இந்நிலையில், விபரத்தை அறிந்து, மலையடிவாரத்துக்கு விரைந்து வந்த, சிசுவின் தாயிடம் விபரம் தெரிவிக்கப்பட்டு, குழந்தையும் ஒப்படைக்கப்பட்டது என்றும் ​பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 


Add new comment

Or log in with...