Thursday, March 28, 2024
Home » மத்திய காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்: கெய்ரோவில் தொடர்ந்தும் பேச்சு
இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதால்

மத்திய காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்: கெய்ரோவில் தொடர்ந்தும் பேச்சு

by sachintha
December 30, 2023 6:36 am 0 comment

இஸ்ரேலிய படைகள் அகதி முகாம்களை நோக்கி முன்னேறும் நிலையில் மத்திய காசா பகுதியில் இருந்து சுமார் 150,000 பேர் வரை தப்பிச் செல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

புரைஜ் அகதி முகாமின் கிழக்கு புறநகர் பகுதியாக இஸ்ரேலிய டாங்கிகள் நெருங்கியுள்ளதாக பார்த்தவர்கள் மற்றும் ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் புரைஜ் மற்றும் அருகிலுள்ள நுஸைரத் மற்றும் மகாசி அகதி முகாம்களுக்கு தனது தரைவழித் தாக்குதலை அண்மையில் விரிவுபடுத்தி இருந்தது.

காசாவெங்கும் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மேலும் டஜன் கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நுஸைரத் மற்றும் மகாசி முகாம்களில் உள்ள வீடுகளை இலக்கு வைத்து வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதில் இலக்கு வைக்கப்பட்ட வீடுகள் தவிர சுற்றி இருக்கும் நான்கைந்து வீடுகள் என சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 35க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று தெற்கு காசாவில் உள்ள குவைட்டி மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் குடியிருப்புக் கட்டடங்கள் மீது நேற்று இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் குறைந்து 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல்போயிருக்கும் நிலையில் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 187 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இடைவிடாத தாக்குதல்களால் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமான போரில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21,500ஐ தாண்டியுள்ளது. 11 வாரங்களாக நீடிக்கும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

இதன்படி காசா மக்கள் தொகையில் நான்கு வீதத்தினர் கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது காணமல்போயுள்ளனர். காணாமல்போயிருக்கும் 7,000க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் மத்திய காசாவின் குறுகிய நிலப்பகுதியில் சுமார் 90,000 குடியிருப்பாளர்கள் மற்றும் 61,000 இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் நிலையில் அவர்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் டெயிர் அல் பாலாஹ்வுக்கு தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

எவ்வாறாயினும் டெயிர் அல் பாலாஹ்வில் ஏற்கனவே அளவுக்கு அதிகமான மக்கள் நிரம்பி வழிவதாகவும், வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு அடைக்கலம் பெற்றிருப்பதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்கள் புதிய இடங்களுக்கு பரவி வரும் நிலையில் காசாவில் சனநெரிசல் மிக்க பகுதியாக மாறி இருக்கும் ராபாவுக்கு கடந்த சில நாட்களில் புதிதாக சுமார் 100,000 பேர் வரை அடைக்கலம் பெற்றிருப்பதாக ஐ.நா கூறியது.

புரைஜில் இருந்து குறைந்தது தனது 35 குடும்ப உறுப்பினர்களுடன் வெளியேற்றப்பட்டதாக 60 வயது ஒமர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

“எப்போதும் வரக்கூடாது என்று பிரார்த்தித்த அந்தத் தருணம் வந்துவிட்டது. என்றாலும் வெளியேறுவது கட்டாயமாகிவிட்டது” என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்தார். “இஸ்ரேலின் இந்த கொடிய போரினால் நாம் இப்போது டெயிர் அல் பாலாஹ்வில் கூடாரம் ஒன்றில் இருக்கிறோம்” என்று தொலைபேசி வழியாக அவர் கூறியுள்ளார்.

படுகொலை இரவுகள் தொடர்வதாக விபரிக்கும் உள்ளூர் மக்கள், தற்காலிக முகாம்களில் இருந்தும் இடம்பெயரும் சூழல் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.

எங்கு சென்றாலும் மரணம் எனில் வீட்டிலேயே உயிர் போகட்டும் என்று தெரிவித்துள்ளார் புரைஜ் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ராமி அபு மோசப்.

இஸ்ரேல் தரைவழியில் தனது இராணுவ படையை அனுப்புவதற்கு முன்பாக அந்தப் பகுதிகளில் தொடர் குண்டுவீச்சை நிகழ்த்துகிறது.

இத்தனை விரிவான மற்றும் தீவிரமான தாக்குதல் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைக்கொண்டு சேர்ப்பதில் தடையை ஏற்படுத்துவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. காசாவில் நான்கில் ஒருவர் பசியில் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

தெற்கு காசா நகரான ரபாவை நோக்கி மேலும் மேலும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் காசா பணிப்பாளர் டொம் வைட் தெரிவித்துள்ளார். “மிகக் குறுகிய நிலப்பகுதிக்குள் அதிகமான மக்கள் நிரம்பி இருப்பது அவர்களுக்கு உதவாது” என்றார்.

இஸ்ரேலிய தரைப்படை காசாவில் தொடர்ந்தும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இஸ்ரேலிய படையினர் மற்றும் வாகனங்களை தமது போராளிகள் இலக்கு வைப்பதாகக் கூறும் வீடியோ ஒன்றை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் ஒரு இஸ்ரேலிய வீரர் காசாவில் கொல்லப்பட்டார். வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் 551 ஆவது படைப்பிரிவின் 7008 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த 33 வயது கெப்டன் ஹரெல் ஷர்வித் என்பவரே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இதன்மூலம் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.

ஹமாஸ் எகிப்து விரைவு

இஸ்ரேலிய தரைவழி படை தாக்குதலை நடத்திய வடக்கு காசா தற்போது பெரும் அழிவை சந்தித்திருக்கும் நிலையில் அந்தத் தரைப்படை மேலும் தெற்காக முன்னேறி வரும் நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியம் எங்கும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான திட்டத்தை எகிப்து அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை கூறுவதற்கு ஹமாஸ் தூதுக் குழு ஒன்று நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்துள்ளது.

இந்தத் திட்டத்தில் புதிய போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது, இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் இறுதியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னராக காசவை கட்டியெழுப்புவது மற்றும் நிர்வகிப்பதற்கான பொறுப்பு வகிக்கும் வகையில் அனைத்து பலஸ்தீன தரப்புகளையும் தொடர்புபடுத்திய பேச்சுவார்த்தை ஒன்றுக்குப் பின்னர் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட அரசு ஒன்றை அமைப்பது பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வாபஸ் பெறுவதற்கான உத்தரவாதங்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பிலான பல்வேறுபட்ட அவதானிப்புகள் உட்பட பலஸ்தீன தரப்புகளின் பதிலை கெய்ரோ சென்றிருக்கும் தூதுக்குழு வழங்கும் என்று ஹமாஸ் தரப்பை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனிய இரத்தம் சிந்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஒன்றிணைக்க எதிர்பார்ப்பதாக எகிப்தின் அரச தகவல் சேவைகளின் தலைவர் டியா ரஷ்வான் தெரிவித்துள்ளார்.

எனினும் காசா முழுவதும் காலவரையின்றி இஸ்ரேல் சில வகையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அது அந்தப் பகுதி மீதான மீள் ஆக்கிரமிப்பாக அமையாது என்று கூறியுள்ளது.

காசாவில் எஞ்சி இருக்கும் 129 பணயக் கைதிகளையும் விடுவிப்பதே இந்தப் போரின் பிரதான நோக்கங்களில் ஒன்று என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக அது சூளுரைத்துள்ளது.

இந்தப் போர் பிராந்தியத்தில் மோதலைத் தூண்டியுள்ளது. குறிப்பாக யெமனின் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹூத்திக்களால் அனுப்பப்பட்ட ஒரு ஆளில்லா விமானம் மற்றும் கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் நேற்று முன்தினம் (28) கூறியது. இது கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி தொடக்கம் அந்தக் கிளர்ச்சியாளர்களால் சர்வதேச கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் 22ஆவது முயற்சியாக இருந்தது என்றும் அமெரிக்க இராணுவம் கூறியது.

தாக்குதல் இடம்பெறும்போது அந்தப் பகுதியில் இருந்த எந்த ஒரு கப்பலுக்கோ அல்லது நபர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகிலும் தெற்கு சிரியாவிலும் இஸ்ரேல் வியாழனன்று தாக்குதல்களை நடத்தி இருப்பதாக சிரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் தெற்கு சுவைதா மாகாணத்தில் உள்ள சிரிய வான் பாதுகாப்பு நிலை ஒன்று மற்றும் டமஸ்கஸுக்கு அருகில் உள்ள சர்வதேச விமானநிலையம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT