Home » காசாவில் தஞ்சமடையவும் இடமின்றி மக்கள் தவிப்பு

காசாவில் தஞ்சமடையவும் இடமின்றி மக்கள் தவிப்பு

by Gayan Abeykoon
December 29, 2023 10:28 am 0 comment

மத்திய காசாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மற்றும் தரைவழி தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அங்கு ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனர்கள் மேலும் தெற்காக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எனினும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இந்தப் போரினால் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தெற்கு காசாவில் மக்கள் தஞ்சமடைவதற்கு இட வசதி தீர்ந்து வருவதால் தற்காலிக முகாம்களை பெறுவதற்கு மக்கள் போராடி வருகின்றனர்.

“குண்டு தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்து, நெருங்கி வருகிறது. அது நேற்று இரவு பயங்கரமானதாகவும் தாங்க முடியாததாகவும் இருந்தது” என்று சொன்டோஸ் என தனது முதல் பெயரை மாத்திரம் கூறிய ஒருவர் ‘மிடிலீஸ்ட் ஐ’ இணைய செய்தி நிறுவனத்திற்கு புதன்கிழமை (27) குறிப்பிட்டிருந்தார்.

மத்திய காசாவின் புரைஜ் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது. இந்தப் பகுதியில் போருக்கு முன் சுமார் 90,000 பேர் வாழ்ந்ததோடு தற்போது அங்கு 61,000 இடம்பெயர்ந்த மக்களும் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறியவர்களாவர்.

புரைஜ் அகதி முகாமும் காசாவின் ஏனைய இடங்கள் போன்று 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டு அடைக்கலம் பெற்றவர்கள் வசிக்கும் பகுதியாகும்.

தற்போது இங்குள்ள மக்கள் கால்நடையாகவும் கழுதை வண்டிகளிலும் தமது உடைமைகளைச் சுமந்தபடி மேலும் தெற்காக டெயிர் அல் பலா பகுதியை நோக்கி வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் தங்குமிடங்களில் ஏற்க முடியுமான அளவை விட மக்கள் பல மடங்கு நிரம்பியிருப்பதால், புதிதாக வருபவர்கள் குளிர்கால இரவிலும் நடைபாதைகளில் கூடாரங்களை அமைத்துள்ளனர். பாதுகாப்பானது என கருதி பெரும்பாலான மக்கள் அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையைச் சூழ கூடாரங்களை அமைத்துள்ளனர்.

எனினும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன் காசாவின் எந்தப் பகுதியும் பாதுகாப்பாக இல்லை. டெயிர் அல் பலா மற்றும் தெற்கு முனையான ரபா பகுதியில் சன நெரிசல் மிக்க பகுதியாக மாறியுள்ளன. இந்தப் பகுதிகளிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு தரைப் படைகளும் இங்கு வரும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT