Friday, April 19, 2024
Home » கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

by Gayan Abeykoon
December 29, 2023 2:00 am 0 comment

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளையில் அதிக மழை பெய்து வருவதுடன் தாழ் நில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

அத்துடன், கந்தப்பளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளநீர் போவதினால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளது. பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளமையால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியமையால் அவை சேதமடைந்துள்ளன.

வலப்பனை பிரதேசத்தில் இராகலை புரூக்சைட் மற்றும் சில்வர்கண்டி தோட்டத்தில் வேருடன் பாரிய மரம் சாய்ந்து புரூக்சைட் சந்தி ஊடாக கோணப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் வரை செல்லும் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில்வர்கண்டி தோட்டத்தில் ஊற்று நீர் உள்ள பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மண்ணை அகற்றி போக்குவரத்தை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை பகுதியில் பாரிய கற்களுடன், மண்மேடு ஒன்று சரிந்துள்ளது.

ஹங்குராங்கெத்த பகுதியில் மண்மேடு சரிந்து பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உடபுஸ்ஸலாவ சென் மாக்றட் குடியிருப்பு ஒன்றின் பின் பகுதியில் மண்மேடு சரிவு ஏற்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மத்துரட்ட பொலிஸ் பகுதியின் பிரதான வீதியில் மரம் ஒன்று சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரிந்த மரத்தை அகற்றும் பணி பிரதேச மக்களின் உதவியுடன் மேற்கொண்டு வருவதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று காலை முதல் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT