Friday, March 29, 2024
Home » முஸ்லிம்களுக்கு நம்பிக்கை தரும் ஜனாதிபதியின் அறிவிப்பு

முஸ்லிம்களுக்கு நம்பிக்கை தரும் ஜனாதிபதியின் அறிவிப்பு

by Gayan Abeykoon
December 29, 2023 1:00 am 0 comment

வா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலுள்ள குருத்தலாவவில் அமைந்திருக்கும் குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் பிரதான வைபவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. இவ்வைபவத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலையே இதுவாகும். இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் பிரதம அதிதியான ஜனாதிபதி உரையாற்றுகையில், ‘இந்நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவையில் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

குறிப்பாக கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை எழுந்தது. அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய நாடுகள் அது பற்றிய முடிவுகளை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டாலும், இலங்கையில் அந்த முடிவுகளை மாற்ற நீண்ட காலம் எடுத்தது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது அந்தந்த மதத்தின்படி முடிவு செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதில் சில தவறுகள் நடந்திருந்தன. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயல்படுகிறோம். புத்தகங்கள் தருவிப்பது மற்றும் எகிப்தில் இருந்து போதகர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன. முஸ்லிம் மதக் கல்விக்கு அவை முக்கியமானவை என்பதால் அந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது முன்வைக்கப்படவில்லை. இதுபோன்ற முஸ்லிம் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் உள்ளன’ என்பதையும் ஜனாதிபதி தமது உரையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை முஸ்லிம்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் இந்நாட்டில் உயிரிழந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வதில் பலவிதமான அசௌகரியங்களை இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்டார்கள். இத்தொற்றினால் உயிரிழந்தவர்களின் பிரேதங்களை தகனம் செய்யும் பொது கொள்கையை பல்லின மக்கள் வாழும் இலங்கை கடைபிடித்தது. ஆனால் முஸ்லிம்களின் மார்க்கத்தின்படி மரணமடைந்தவரின் பிரேதத்தை தகனம் செய்ய முடியாது. மரணமடையும் அனைவரும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.

அதனால் தகனம் செய்யும் பொது கொள்கையில் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு கோரிய முஸ்லிம்கள் இத்தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களின் பிரேதங்கள் தகனம் செய்யப்படுவதற்கு ஆட்சேபனையும் தெரிவித்தனர். முஸ்லிம் பிரதிநிதிகள் இது தொடர்பில் கடந்த ஆட்சியாளர்களுடன் சந்திப்புக்களை நடாத்தினர். அந்தப் பின்புலத்தில் பல மாதங்களின் பின்னர் அக்கொள்கையில் முஸ்லிம்கள் உட்பட இத்தொற்றினால் மரணமடைபவர்களை அடக்கம் செய்ய விரும்புபவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் கடந்த கொவிட் 19 தொற்று காலத்தைப் போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளின் அவசியம் உணரப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நாட்டில் சிங்கள, தமிழ் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் வசதிகளையும் இந்நாட்டு முஸ்லிம்களும் அனுபவித்தே வந்தனர். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சில கட்டுப்பாடுகள் இவற்றில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக புத்தகங்கள் தருவிப்பது மற்றும் எகிப்தில் இருந்து போதகர்களை அழைத்து வருதல் அடங்கலான சில விடயங்கள் குறித்து முஸ்லிம்களுக்கென விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்நாட்டு முஸ்லிம்களின் சமயக் கல்விக்கும் பெரும் சவாலாகியுள்ளன.

இவ்வாறான சூழலில் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அசௌகரியங்களையும் தீர்த்து வைக்குமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் அடங்கலாக பல தரப்பினரும் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் முழு அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கிறேன். அதற்கு முன், மதத் தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து, இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் ஆராய உள்ளேன். அதற்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றுள்ளார். ஆகவே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் நிச்சயம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அத்தோடு அவர்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் முடிவுக்கு வரும் காலமும் வெகுதொலைவில் இல்லை என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT