Friday, March 29, 2024
Home » தமிழ்ப்பற்றும், தேசாபிமானமும் நிறைந்தவர் நடிகர் விஜயகாந்த்

தமிழ்ப்பற்றும், தேசாபிமானமும் நிறைந்தவர் நடிகர் விஜயகாந்த்

புரட்சிக் கலைஞர் மறைவுக்கு அபிமானிகள் அனுதாபம்

by Gayan Abeykoon
December 29, 2023 7:02 am 0 comment

சென்னை மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார் அரசியல் கட்சி தலைவர்கள், திரை துறையினர் ஆகியோர் இரங்கல்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தே.மு.தி.க கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தே.மு.தி.க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும், அவர் காலமானார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவாசிப்பதில் சிக்கல் இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். உயிரிழந்த விஜயகாந்தின் உடல் அவருடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இவரது மரணம் தமிழ்நாடு முழுவதும் அவரது கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், அ. தி. மு. க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஆளுநர் என். ஆர். ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ெடாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திரைப்பட சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் பிரபலமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், அரசியல்வாதி என்றெல்லாம் பன்முக ஆளுமை கொண்டவர்.

விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 2015 ஆம் ஆண்டு வரை 150 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.

விஜயகாந்த் இதுவரை தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும், இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் ‘புரட்சிக் கலைஞர்’ என்னும் பட்டம் உண்டு. விஜயகாந்த், மதுரையில் கே.என்.அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி ஆகியோருக்கு மகனாக 1952 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி பிறந்தார்.

நடிப்புக் கலையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களைக் கடந்து 1979 ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ படத்தில் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

1990 ஆம் ஆண்டு ஜனவரி 31இல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதாவை மதுரையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலமே அறிமுகமானார்.

இவர் 1979 இல் ‘அகல் விளக்கு’ படத்தில் நடித்த பின்னர் அதே ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவரது முன்னணி நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு அடையாளத்தினை பெற்று தந்துள்ளது. இவர், நாயகனாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவர் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்டவிரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும்.

இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் பொலிஸ், இராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘புரட்சி கலைஞர்’ என்ற பட்டம் பெற்றிருந்தாலும், இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் ‘கப்டன்’ என்றே அழைக்கின்றனர்.

இவரது நடிப்பையும், நாட்டுப் பற்றையும் பாராட்டி கலைமாமணி விருது (2001), எம்.ஜி.ஆர் விருது (1994), சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009) ஆகிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய அரசால் ‘சிறந்த குடிமகனுக்கான’ விருது அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக திரைப்பட சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். பல கோடி கடனில் இருந்த தமிழ் திரைப்பட சங்கத்தை தனது சிறந்த வழிகாட்டுதலில் ஒரு முன்னணி திரைப்பட சங்கமாக உயர்த்தியுள்ளார்.

இவர் 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.

விஜயகாந்த் உடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருச்சி  எம்.கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT