Friday, April 19, 2024
Home » கேரள மாநில எர்ணாகுளத்தில் தமிழ்க் கவிதைகள் கருத்தரங்கு

கேரள மாநில எர்ணாகுளத்தில் தமிழ்க் கவிதைகள் கருத்தரங்கு

by Gayan Abeykoon
December 29, 2023 6:16 am 0 comment

எர்ணாகுளம் தமிழ் ஐக்கிய சங்கம், இனிய நந்தவனம் மாத இதழ், கவிமுகி பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் மற்றும் காவிரி கவித்தமிழ் முற்றம் இணைந்து ஏற்பாடு செய்த கவிதைத்தமிழின் படிநிலை வளர்ச்சியும், செல்நெறிகளும் என்னும் பொருண்மையிலான தேசியக் கருத்தரங்கு 27.- 12. – 2023 அன்று கேரளா, எர்ணாகுளம் சங்கரானந்தா ஆசிரமத்தில் நடைபெற்றது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் அமல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ஆய்வுக்கோவையை அருள்முனைவர் அமல் வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக் கொண்டார். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.சலேத் எழுதிய ‘கவிதைத் தமிழின் நோக்கும் போக்கும்’ என்னும் நூலை ஐக்கிய சங்கத் தலைவர் ரவீந்திரன் வெளியிட தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா பெற்றுக் கொண்டார். முனைவர் ரெ.நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் பேராசிரியர்கள் தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். அன்புத்தோழி ஜெயஸ்ரீ எழுதிய கவிதை நூலை கவிஞர் பல்லவிகுமார் வெளியிட கவிஞர் ம.திருவள்ளுவர் பெற்றுக் கொண்டார்.

மாலையில் நடைபெற்ற இனிய நந்தவனம் இலக்கியச் சங்கம் நிகழ்வில் நந்தவனம் பவுண்டேசன் சார்பில் ஜோ.பிரேமா கிறிஸ்டி, ரெ.நல்லமுத்து, லி.மெர்சி டயானா, வெ.முத்துலட்சுமி ஆகியோருக்கு வெற்றித்தமிழினி விருதும் சி.ஜெயச்சந்திரன், இரா.தமிழ்தாசன், ரெ.நல்லமுத்து ஆகியோருக்கு வெற்றித்தமிழன் விருதும் வழங்கப்பட்டன. இனிய நந்தவனம் மாத இதழ் கேரளச் சிறப்பிதழை கோயர்போர்ட் தலைவர் குப்புராம் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் முதல்வரும், கவிஞருமான தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி கருத்தரங்கில் நிறைவுரையாற்றினார். இவர் உரையாற்றும் போது “பேசப்படும் ஒரு கவிதையை எழுதவேண்டுமானால் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதவேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை எல்லாமே காலத்தின் மாற்றங்கள். இங்கே எல்லோருக்குள்ளும் கவிதை இருக்கிறது. அதை எழுதுபவர்கள்தான் கவிஞர்களாகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன், பெஸ்கி உள்ளிட்டோரும் உரையாற்றினர். பிற்பகல் அமர்வில் இலட்சுமணன் ராமகோடி, அன்புத்தோழி ஜெயஸ்ரீ ஆகியோர் கவிதை அனுபவப் பகிர்வில் பங்குபற்றினர். கவியரங்கில் கவிஞர் இளவரசி, நித்யா கோபாலன், ச.மெ. ஆன்ஸ்டின் ஜோ ஆகியோர் கவிதை பாடினர்.

‘கனவைத்திருடும் கனவுகர்’ என்ற தலைப்பில் ம.திருவள்ளுவர் சிறப்புரையாற்றினார். முன்னதாக இனிய நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கினார். நிறைவில் முனைவர் சலேத் நன்றியுரையாற்றினார்.‌ ஆசிரியைகள் பிரேமா கிறிஸ்டி, மெர்சி டயானா, நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT