நீத்தை -ஹிழ்று கிராமத்தில் யானைகள் அட்டகாசம்; ஒருவர் காயம் | தினகரன்

நீத்தை -ஹிழ்று கிராமத்தில் யானைகள் அட்டகாசம்; ஒருவர் காயம்

அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நீத்தை -ஹிழ்று நகர் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளதோடு, உடைமைகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை நான்கு மணியளவில் நீத்தை -ஹிழ்று நகர்க் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் சில   மூன்று வீடுகளை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், பயன்தரு மரங்களையும் நாசப்படுத்தியுள்ளன.

இதன்போது, வீடொன்றில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் காட்டு யானைகள்  அவ்வீட்டைத் தாக்கியுள்ளதால்,  வீட்டின் சுவர் உடைந்து குடும்பத் தலைவரின் மீது விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

அத்தோடு தென்னை மரங்களையும்  மேட்டு நிலப் பயிர்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

மேலும், வீடுகள் சிலவற்றின் ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்துக்கொண்டு புகுந்த யானைகள்  களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் உட்கொண்டுள்ளன. 

அக்கரைப்பற்று நகரிலிருந்து சுமார் 17கிலோமீற்றர் தொலைவிலுள்ள நீத்தை -ஹிழ்று நகர் கிராமத்தில் சுமார் 60குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நெற்செய்கையை  மேற்கொள்ளும் பிரதேசத்தை அண்டிய பகுதியில் குடியிருப்புகள் அமையப் பெற்றுள்ளதால் காட்டு யானைகளின் தொல்லையும் வெகுவாக உள்ளது.

எனவே, காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தம்மைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(அட்டாளைச்சேனை தினகரன், அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்கள்)


Add new comment

Or log in with...