யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுகோள் | தினகரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுகோள்

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்று பாகுபாடில்லாமல், அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பாகத் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன என, கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னால் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

காணிப் பதிவுகள் தொடர்பாக இம்மக்கள்; பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர், இவர்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும்  அழைப்பு விடுத்தார். 

உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில், ஆவணங்களைப் பதிவு செய்தல் தொடர்பான விரைவான சேவை  இன்று (16)  மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியபோது, 'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பாக  சுமார் 30வருடங்களுக்கு முன்னால் அவதானிக்கின்றபோது, பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இப்பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கிராம அலுவலகர்களை நாடிச் சென்றால், ஒரு சில கிராம அலுவலகர்கள் தமக்காகவே மக்கள் வருகின்றார்கள் என நினைத்து அதற்கான பதிலைக் கூறுகின்றனர்.

கிராமங்களுக்கு கிராம அலுவலகரை நியமிப்பது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கே.

நான் சில தினங்களுக்கு முன்னர் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தீவுப்பிட்டிக் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அக்கிராமத்தில் சுமார் 30வருடங்களுக்கும் மேலாக 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

அம்மக்களுக்கு இதுவரை காணி வழங்கப்படவில்லை. எனினும், அக்கிராமத்திலுள்ள 7குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அக்கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறித்த கிராமத்தில் அரச காணிகள் இருக்கின்றபோதும், அக்காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு அங்குள்ள கிராம அலுவலகர்கள் முதல் அதிகாரிகள்வரை தடையாக இருக்கின்றார்கள்.

அடிமட்டத்தில் இருக்கின்ற மக்களை நாங்கள் புத்திசாலியாக மாற்ற வேண்டும். அந்த மக்களின் எண்ணங்களை நாங்கள் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். அந்த மக்கள் எதனையும் அறியாதவர்களாக உள்ளனர். அந்த மக்கள் எதனையும் கொண்டு செல்ல வரவில்லை. தாங்கள் இருப்பதற்கு ஒரு இடத்தை மாத்திரமே கேட்டுள்ளனர்.

அதற்கு நாம் இயன்ற உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களினால் இயலாத நிலையிலேயே அதிகாரிகளை நாடிச் செல்கின்றனர். எனவே, அனைத்து அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்கி மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்' என்றார்.

(மன்னார் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...