சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருதுகள் | தினகரன்

சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருதுகள்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நாளை இரா. உதயணன் இலக்கிய விருதுவிழா

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வருடாந்தம் வழங்குகின்ற 'இரா.உதயணன் இலக்கிய விழா' கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவுடன் சேர்த்து விருது விழாவை இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் சார்பாக முன்னின்று ஏற்பாடு செய்து வருகின்ற இலக்கியவாதியும் சமூக செயற்பாட்டாளருமான தம்பு சிவாவின் பவளவிழா மலர் வெளியீடும், அவரை ஆசிரியராகக் கொண்ட 'தாயக ஒலி' 40 வது சிறப்புமலர் வெளியீடும் நாளைய தினம் நடைபெறவிருக்கின்றன.

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறையைச் சேர்ந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் முதன்மை விருந்தினராக சாகித்யரத்னா பேராசிரியர் சபா. ஜெயராசா கலந்து கொள்கிறார்.

கௌரவ விருந்தினர்களாக கலாகீர்த்தி உடுவை எஸ்.தில்லைநடராசாவும் மூத்த இலக்கியவாதி மருத்துவர் தி.ஞானசேகரனும் சைவப் புலவர் சு.செல்லத்துரையும், முன்னிலை விருந்தினராக இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரும் கலந்து கொள்வர்.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் 2016ம் ஆண்டு தொடக்கம் இரா.உதயணன் இலக்கிய விழாவை நடத்தி இலக்கியவாதிகளையும் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களையும் கௌரவித்து விருதுகளை வழங்கி வருகின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான விழாவை தவிர்க்க முடியாத காரணங்களினால் நடத்தமுடியாமல் போய்விட்டது. அதனால் அந்த விழாவை நாளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

விருதுபெறும் படைப்பாளிகளின் விபரம் வருமாறு;

சின்னத்தம்பி ஸ்ரீஇராமகிருஷ்ணா, திருமதி கமலநாயகி ஸ்ரீஇராமகிருஷ்ணா ஞாபகார்த்தமாக வழங்கப்படும் விருது 'யாவரும் கேளிர்' என்ற நாவலை எழுதிய அல்வாயைச் சேர்ந்த சிவ ஆரூரனுக்கு வழங்கப்படுகிறது.

டாக்டர் யோவான்பிள்ளை சந்திரசேகரம் , திருமதி பாக்கியம் சந்திரசேகரம் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் விருது 'அமேசன் காட்டில் அழகிய பூசாரி' என்ற சிறுகதைக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த கலைக்கோட்டன் அ.இருதயநாதனுக்கு வழங்கப்படுகிறது.

வேலுப்பிள்ளை சிவஞானம் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் சிறுவர் இலக்கிய விருது 'சிறுவர் கதைகள்' என்ற நூலை எழுதிய வவுனியாவைச் சேர்ந்த முத்து இராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.

சின்னத்தம்பி ஸ்ரீஇராமகிருஷ்ணன், திருமதி கமலநாயகி ஸ்ரீ இராமகிருஷ்ணன் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் விருது 'விளைச்சல்' என்ற காவியத்துக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனுக்கு கிடைக்கிறது.

ெடாக்டர் எம்.என்.ஸ்ரீஸ்கந்தராசா ஞாபகார்த்த விருது தமிழ் வளர்ச்சி இலக்கியத்துக்காக 'நூல் தேட்டம்' என். செல்வராசாவுக்கு (லண்டன்) கிடைக்கிறது.

சசிபாரதி சபாரத்தினம் ஞாபகார்த்த அயலகப் படைப்புக்கான விருது 'முந்தல் பள்ளம்' நாவலுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்டனூர் சுராவுக்கு வழங்கப்படுகிறது.

அயலகப் படைப்புக்கான சின்வட்டர் ஐயம்பிள்ளை ஞாபகார்த்த விருது 'இலங்கையில் தமிழர் இறைமை' என்ற கட்டுரைக்காக லண்டனைச் சேர்ந்த கலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கத்துக்கு கிடைக்கிறது.

சின்னத்தம்பி ஸ்ரீஇராமகிருஷ்ணா, திருமதி கமலநாயகி ஞாபகார்த்த உயர் இலக்கிய விருது வவுனியாவைச் சேர்ந்த அருணா செல்லத்துரைக்குக் கிடைக்கிறது.

சிவகாமிநாதபிள்ளை சிங்காரம்பிள்ளை ஞாபகார்த்த சிறந்த ஊடகவியலாளருக்கான விருது வவுனியாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பொன்னையா மாணிக்கவாசகத்துக்கு வழங்கப்படுகிறது.

இனநல்லுறவு இலக்கியத்துக்கான முருகேசு தம்பு, திருமதி தையல்நாயகி தம்பு ஞாபகார்த்த விருது கொழும்பைச் சேர்ந்த உபாலி லீலாரத்னவுக்கு கிடைக்கிறது.

கிட்ணர் - திருமதி பாப்பத்தி அம்மாள் ஞாபகார்த்த வாழ்நாள் சாதனையாளர் விருது மட்டக்களப்பைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் செ. குணரத்தினத்துக்கு கிடைக்கிறது.

தவமணி சிவஞானம் ஞாபகார்த்த வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த இலக்கியவாதி செ.அந்தனி ஜீவாவுக்கு வழங்கப்படுகிறது.

வேலுப்பிள்ளை வன்னியசிங்கம் ஞாபகார்த்த வாழ்நாள் சாதனையாளர் விருது சுன்னாகத்தைச் சேர்ந்த சு.துரைசிங்கத்துக்கு கிடைக்கிறது.

வைரமுத்து தம்பிராசா ஞாபகார்த்த வாழ்நாள் சாதனையாளர் விருது கலைஞர் கலைச்செல்வனுக்கும் திருமதி சசிதேவி சிவனேசன் ஞாபகார்த்த 'தாயக ஒலி' சஞ்சிகையின் சிறப்பு வாசகர் விருது கொழும்பைச் சேர்ந்த க. சரவணமுத்துவுக்கு வழங்கப்படுகிறது.


Add new comment

Or log in with...