சிலாபம் பிரதேச சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் விபத்தில் பலி | தினகரன்

சிலாபம் பிரதேச சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் விபத்தில் பலி

சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் நுவன் சஞ்ஜீவ மெண்டிஸ் (44) மாதம்பையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து நேற்றுமுன்தினம்(14) மாதம்பை- குருணாகலை பிரதான வீதியிலுள்ள சுதுவெல பிரதேசத்தில் இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தில் மாதம்மை சுதுவெல பெலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலாபம் பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினரான நுவன் சஞ்ஜிவ மெண்டிஸ் உயிரிழந்திருப்பதை பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

உயிரிழந்துள்ள பிரதேச சபை உறுப்பினர், தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பணி முடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு நோக்கி வரும் வழியில் சிறிய ரக லொறியொன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை உறுப்பினர் தனது மோட்டார் சைக்கிளை பிரதான வீதியிலிருந்து வலது புறமாக திருப்பியபோதே எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இச்சம்பவத்துக்கு காரணமான லொறி சாரதியை கைது செய்துள்ள மாதம்பை பொலிஸார் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.


Add new comment

Or log in with...