சிறிய விவசாய குடும்பங்களை ஊக்குவிக்க உலக வங்கி 125மில். டொலர் கடனுதவி | தினகரன்

சிறிய விவசாய குடும்பங்களை ஊக்குவிக்க உலக வங்கி 125மில். டொலர் கடனுதவி

இலங்கையில் ஆறு உலர் வலயங்களில் உள்ள 470,000 சிறிய விவசாய குடும்பங்களின் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும் அவர்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் 125மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற உலக வங்கியின் பணிப்பாளர் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாகாணங்களே இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. வரட்சி மற்றும்  வெள்ளப் பெருக்குப் போன்ற காலநிலையுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களால் இலங்கை வெகுவாகப் பாதித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயம் 7.7வீத பங்களிப்பைச் செலுத்தி வருவதுடன், வேலையாட்தொகுதியில் 27வீதமானவர்கள் விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.  

'முன்னேற்றரமான பயிர்களை அறிமுகப்படுத்தல், பயிரிடும் முறைகள், நீர்வள முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில் புத்தாக்கம், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாயிகள் புதிய முறைகளைப் பின்பற்ற உதவுதல், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்' என இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் இதா.இஸட் பிஸாராயி-ரிதிஹோவ் தெரிவித்தார். 

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் போதியளவு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு உதவியாகவிருக்கும். தற்பொழுது 10வீதமான பெண்களே நன்மை அடைகின்றனர். இவ்வாறான நிலையில் உலக வங்கியின் இத்திட்டத்தின் ஊடாக விவசாயத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வேறுபாட்டை குறைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

காலநிலை பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள சிறிய விவசாயிகள் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அதிகரித்தல், காலநிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தல், விவசாய உற்பத்திகளை அதிகரித்து அவற்றை சந்தைப்படுத்தலை மேம்படுத்தல் போன்றவற்றுக்கு உலக வங்கியின் இத்திட்டம் உதவிசெய்யவுள்ளது. நீர்ப்பாசன நீர் முகாமைத்துவத்திற்கு உட்பட, விவசாயிகள் குழுவினரால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், சிறியளவிலான விவாசய உற்பத்திகளை வர்த்தகமயப்படுத்த தனியார் துறையினரைக் கொண்டுவருவதற்கும் உதவியாக இருக்கும். 

விவசாய உற்பத்திக்கு இலங்கை கொண்டிருக்கும் நீண்டகால நீர் முகாமைத்துவத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இது உதவியாக இருக்கும் என உலக வங்கியின் பிராந்திய அபிவிருத்திக்கான நிபுணர் சீனித்தம்பி மனோகரன் குறிப்பிட்டார். காலநிலை பின்னடைவிலிருந்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பது இதன் பிரதான நோக்கமாகும். அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறையினர் மற்றும் சமூகக் குழுவினர் உள்ளிட்ட பல தரப்பினர் இதில் இணைந்துள்ளனர் என்றும் கூறினார். 

புதிய ஸ்மார்ட் காலநிலை நீர்ப்பாசன விவசாயத் திட்டமானது விவசாய அமைச்சின் ஊடாக ஆறு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டம் 140மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது. இதில் 125மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தினால் கடனாக வழங்கப்படும். 10மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை அரசாங்கத்தினாலும், திட்டத்தின் பயனாளிகளால் 5மில்லியன் அமெரிக்க டொலர்களும் பங்களிப்புச் செய்யப்படும்.   

மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...