Home » மாயமான தங்கத் தட்டு; கைதான கதிர்காம ஆலய பூசகர் பிணையில் விடுதலை

மாயமான தங்கத் தட்டு; கைதான கதிர்காம ஆலய பூசகர் பிணையில் விடுதலை

- கதிர்காம ஆலயத்தின் காணிக்கை வெகுவாக குறைவு

by Rizwan Segu Mohideen
December 27, 2023 8:18 pm 0 comment

– அருகிலுள்ள புற்றுநோய் உதவி அலுவலகத்திற்கு குவியும் நிதி

கதிர்காமம் ஆலயத்தின் தங்கத் தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால ரி. ரத்நாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (27) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (CCD) சரணடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர், திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரூ. 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி, கையொப்பமிட வேண்டுமென, நீதிமன்றம் பிணை நிபந்தனை விதித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இன்று (27) காலை 7.30 மணியளவில் சரணடைந்த அவரிடம், சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, கதிர்காம ஆலயத்திற்க்கு காணிக்கையாக வழங்கப்படும் தங்கம் பூசகர்களுக்கு சொந்தமானது எனவும் அதனால் தான் தமக்கு வழங்கப்பட்ட தங்க தட்டை தாம் எடுத்துச் சென்றதாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால ரி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் கோயம்புத்தூரில் மரணமடைந்த ‘அங்கொட லொக்கா’ எனும் பிரபல பாதாளக் கும்பல் தலைவனின் மனைவி, கதிர்காமம் தேவாலயத்திற்கு 2020 ஆம் ஆண்டில் 38 பவுண்கள் கொண்ட தங்கத் தட்டை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பத்தாரின் தோஷத்திற்குப் பரிகாரத்திற்காக இவ்வாற வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தட்டு காணாமல் போனதை அறிந்ததைத் தொடர்ந்து, கதிர்காமம் தேவாலய பஸ்நாயக்க நிலமே கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டில்ஷான் விக்ரமரத்ன குணசேகரவினால், 2021 இல் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆலயத்தின் களஞ்சியத்தின் பொறுப்பாளரான சூட்டி கபு என அழைக்கப்படும் சமன் பிரியந்த எனும் உதவி பூசகர், காணாமல் போன தங்கத் தட்டு என்று கூறி, சுமார் 25 பவுண் எடையுள்ள மற்றுமொரு தங்க தட்டை ஆலயத்தில் ஒப்படைத்துள்ளார்.

விசாரணைகளின் பின்னணியின் அடிப்படையில் கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகரான சோமிபால ரி ரத்நாயக்க மற்றும் மேற்படி விகாரையின் களஞ்சியத்திற்கு பொறுப்பான உதவி பூசகரானசமன் பிரியந்த ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

அதன்படி டிசம்பர் 12ஆம் திகதி குறித்த இருவரது வீடுகளையும் விசாரணைக் குழு சோதனையிட்ட போதும் அவர்கள் அங்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த டிசம்பர் 19ஆம் திகதி தேவாலயத்தின் சேமிப்பு அறைக்கு பொறுப்பான உதவி பூசகர் CCD யில் சரணடைந்ததோடு, அவரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, கதிர்காமம் விகாரையின் பிரதான பூசகரான 85 வயதான சோமிபால ரி ரத்நாயக்கவை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாத பின்னணியில் அவரது வீட்டுக்குச் சென்றபோது, ​​அவர் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர் இன்றையதினம் CCD யில் சரணடைந்திருந்தார்.

இதேவேளை கதிர்காமம் ஆலயத்திற்கு பக்தர்களால் வழங்கப்படும் காணிக்கைகள் சுமார் 50 வீதத்தால் குறைந்துள்ளதாக அங்குள்ள பூசகர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தேவாலயத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக நிறுவப்பட்ட அலுவலகத்திற்கு கிடைக்கும் உதவிகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் மாத்திரம் ரூ. 10 இலட்சம் உதவித்தொகை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காம ஆலய தங்கத் தட்டு மாயமான சம்பவம்; பிரதான பூசகர் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT