'மற்றவர் செய்தால் துரோகம் தாங்கள் சாதித்தால் ராஜதந்திரம்' | தினகரன்

'மற்றவர் செய்தால் துரோகம் தாங்கள் சாதித்தால் ராஜதந்திரம்'

பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியுடன் இணைந்து தங்களுக்கான அனைத்தையும் செய்து கொள்பவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினையென வரும்போது மாத்திரம் ஆளும் கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் போன்று காண்பிப்பது ஏனென, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பினார்.

இன்று ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப்’ போல், ‘இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்காது’ என்றும் ‘நம்பிக்கை தகர்கிறது’ என்றும் மக்களைப் பார்த்து கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இந்த அரசில் இவர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருந்தும், இந்த ஆட்சியில் முடியாதென்றால், இவர்கள் ஜனாதிபதி, பிரதமராகியா எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வரவு செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா எம்.பி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.

மக்கள் மீதான உண்மையான நேசமும், அக்கறையும், ஆர்வமும், ஆளுமையும் இவர்களுக்கு இருந்திருந்தால், இந்நேரம் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பலவும் தீர்ந்திருக்கும்.

ஏற்கனவே வட மாகாண சபையை ஐந்து வருட காலமாக முடக்கி வைத்தும், மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வைத்தும், எமது மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டதால், எவ்விதமான வாழ்வாதாராங்களுக்கும் வழியின்றிய எமது மக்கள் நுண்கடன் போன்ற பாரிய சுமைகளுக்கும், தற்கொலை போன்ற கொடிய செயல்களுக்கும் தங்களைத் திணித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்றும்கூட இந்த அரசுடன் பங்காளிக் கட்சிகளாக இணைந்துள்ள இவர்கள், அதன் மூலமாக மக்களுக்கு எதுவும் செய்யாமல், மக்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயற் பாடுகளையும் முடிக்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசியல் ரீதியில் எமக்குக் கிடைத்திருந்த குறைந்தபட்ச பலத்தினைக் கொண்டு, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் எம்மால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு உதவித் திட்டங்களையும் பல அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க முடிந்தது.

யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மற்றும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மத்திய அரசுகளோடு எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் எமது மக்களுக்கு அக்கால கட்டத்தில் பல்வேறு உதவிகளை நாம் செய்திருந்தோம்.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...