Home » இஸ்ரேலிய தரைவழி தாக்குதல்கள் மக்கள் நெரிசல் மிக்க மத்திய காசாவில் உக்கிரம்

இஸ்ரேலிய தரைவழி தாக்குதல்கள் மக்கள் நெரிசல் மிக்க மத்திய காசாவில் உக்கிரம்

24 மணி நேரத்தில் 241 பேர் பலி: “போர் பல மாதங்கள் நீடிக்கும்”

by Gayan Abeykoon
December 28, 2023 7:54 am 0 comment

காசாவில் சனநெரிசல் மிக்க மத்திய பகுதியில் உள்ள அகதி முகாம்களுக்கு தனது தரைவழி தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் விரிவுபடுத்தி இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் மேலும் 200க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. எனினும் வீடுகள், அகதி முகாம்களை இலக்கு வைத்தே இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் காசா சுகாதார அமைச்சு நேற்று (27) வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்திற்குள் 241 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 382 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி 20,915 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 54,918 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தி மத்திய காசா மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. நுஸைரத், மகாசி மற்றும் புரைஜ் அகதி முகாம்கள் இடைவிடாத தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் நிலையிலேயே இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே காசா தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேலிய உத்தரவை அடுத்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த அகதி முகாம்களில் அடைக்கலம் பெற்றிருப்பதால் இந்தப் பகுதிகள் சனநெரிசல் மிக்க இடங்களாக மாறியுள்ளன.

“மத்திய முகாம்கள் என்று அறியப்படும் பகுதிகளை நோக்கி எமது போர் நடவடிக்கையை விரிவுபடுத்தி இருக்கிறோம்” என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டனியேல் ஹகரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படுவதால் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலுடனான கெரம் ஷலோம் எல்லை பகுதியின் ஊடாக இஸ்ரேலினால் கையளிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத 80 பலஸ்தீனர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை (26) அடக்கம் செய்யப்பட்டதாக காசா நிர்வாகம் குறிப்பிட்டது.

இந்த உடல்கள் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய வக்பு அல்லது சமய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உடல்கள் தெற்கின் ரபா அடக்கஸ்தலம் ஒன்றில் நீண்ட அகழி போன்ற புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டதாக அது கூறியது.

இவ்வாறு புதைக்கப்பட்ட உடல்களை பின்னர் அடையாளம் காண்பதற்காக புகைப்படம் பிடிக்கப்பட்டதாக காசா இஸ்லாமிய வக்பு தெரிவித்துள்ளது.

காசாவில் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படும் 7,000க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் பல மாதங்கள் நீடிக்கும்

இதேவேளை காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் மாதக் கணக்கில் நீடிக்கும் என்று இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்ஸி ஹலேவி கூறியுள்ளார். தொலைக்காட்சி வழியாக நேற்று முன்தினம் (26) வெளியிட்ட அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இதற்கு மாயவித்தை போன்ற தீர்வுகள் இல்லை. ஒரு பயங்கரவாத இயக்கத்தைக் குலைப்பதற்குக் குறுக்கு வழிகள் ஏதுமில்லை. வைராக்கியத்துடன் தொடர்ந்து போரிடுவதுதான் ஒரே வழி” என்று ஹலேவி குறிப்பிட்டார்.

முற்றுகையில் உள்ள காசாவில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தமும் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் காலம் எடுத்துக்கொண்டபோதும் அனைத்து ஹமாஸ் படைப்பிரிவுகளையும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறும் வடக்கு காசாவிலும் கூட பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு காசாவில் மேலும் இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. இதன்படி அங்கு தரை வழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் இடம்பெறும் போர் “பேரழிவை தாண்டி நீடிப்பதாகவும்”, “அழிவுகளை தாண்டி இடம்பெறுவதாகவும்” பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் சாடியுள்ளார். பலஸ்தீன மக்கள் வரலாற்றில் இதுவரை காணாததை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் விபரித்தார்.

இந்தப் போர் ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக அவர் ரமல்லாவில் இருந்து எகிப்து தொலைக்காட்சிக்கு பேசி இருந்தார். காசா பகுதி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறி இருப்பதாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வெடிப்பு ஒன்று ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் தனது இராணுவ நடவடிக்கையை பாரிய அளவில் முன்னெடுத்தது.

அங்கு நேற்றுக் காலை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் 6 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெறும் 25ஆவது ஆளில்லா விமானத் தாக்குதலாக இது இருந்தது.

மருத்துவ பணியாளர்கள் காயமடைந்தவர்களை அணுகுவதையும் இஸ்ரேல் இராணுவம் தடுத்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது. போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 311 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 3,450 பேர் காயமடைந்துள்ளனர்.

எகிப்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்தத் திட்டம் ஒன்று பற்றி இஸ்ரேல் மற்றும் அரபு ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அதன்படி அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுப்பது மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகிய திட்டங்கள் எகிப்தின் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக காசாவில் ஒரு வாரம் நீடித்த கட்டார் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்தத்தின்போது பல டஜன் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

பிராந்தியத்திலும் பதற்றம் தீவிரம்

காசாவை போன்று பிராந்தியத்திலும் பதற்ற சூழல் தீவிரம் அடைந்துள்ளது. செங்கடலில் செல்லும் கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் செங்கடலில் உள்ள கப்பல்களை இலக்கு வைத்து ஹூத்திக்கள் மேற்கொண்ட பல ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாக அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

“அந்தப் பகுதியில் உள்ள கப்பல்களுக்கோ அல்லது ஆட்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று பெண்டகனின் மத்திய கட்டளையகம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதில் டிசம்பர் 26 ஆம் திகதி யெமன் நேரப்படி காலை 6.30 தொடக்கம் 10 மணி நேரத்திற்குள் ஹூத்திக்களினால் தெற்கு செங்கடலில் பன்னிரண்டு ஒருவழி ஆளில்லா விமானங்கள் மற்றும் மூன்று கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தரையைத் தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பான கப்பல் பாதையான செங்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக ஹூத்திக்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் இஸ்ரேல் எல்லையில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தெற்கு லெபனான் நகரான பின்த் ஜிபைல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தது மூவர் பேர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகள் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல்களில் லெபனான் பக்கம் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு டஜனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அடங்குகின்றனர். இஸ்ரேல் பக்கமாக குறைந்தது நான்கு பொதுமக்கள் மற்றும் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய தலைவர் புது டில்லியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூதரகத்திலிருந்து சில மீற்றர் தொலைவில் உள்ள இடத்தில், இஸ்ரேலிய தூதருக்கு ஒரு கடிதத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கடிதம் சுற்றப்பட்ட கொடியையும் கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து அந்த கடிதத்தை பொலிஸார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT