‘737 மெக்ஸ் 8’ விமானங்களை தரையிறக்க அமெரிக்கா மறுப்பு | தினகரன்

‘737 மெக்ஸ் 8’ விமானங்களை தரையிறக்க அமெரிக்கா மறுப்பு

போயிங் 737 மெக்ஸ் விமானங்களை இடைநிறுத்தும்படி தொழிலாளர் சங்கங்கள் மற்றும் செனட்டர்களிடம் இருந்து அழுத்தங்கள் அதிகரித்தபோதும் அந்த விமானங்களை தொடர்ந்து பறக்க விடுவதற்கு அமெரிக்க மத்திய விமானப்போக்குவரத்து நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அந்த விமானங்களை முடக்கி வைப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

போயிங் 737 மெக்ஸ் 8 ரக விமானம் ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது சம்பவமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல நாடுகளும் போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்களை இடைநிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் நேற்று ஹொங்கொங், வியட்னாம் மற்றும் நியூசிலாந்து இணைந்துகொண்டன.

ஏற்கனவே பிரிட்டன், சீனா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியமும் போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்களுக்கு தடை விதித்தன.

ஆனால், இதுவரை நடத்திய ஆய்வில், ‘போயிங் 737 மெக்ஸ் 8’ ரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து கழக தலைவர் டேனியல் எல்வெல் கூறியுள்ளார்.

பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இருந்தும் இதுவரை தகவல் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் 74 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...