பிரெக்சிட் உடன்படிக்கை: பிரிட்டன் பாராளுமன்றத்தில் மீண்டும் தோல்வி | தினகரன்

பிரெக்சிட் உடன்படிக்கை: பிரிட்டன் பாராளுமன்றத்தில் மீண்டும் தோல்வி

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பரிந்துரைத்த பிரெக்சிட் உடன்படிக்கை அந்நாட்டு பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான அந்த உடன்படிக்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 391 பேர் எதிராகவும், 242 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

உடன்படிக்கை தொடர்பில் அன்றைய தினம், தெரேசா மே ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஷொன் க்ளோட்டைச் சந்தித்தார். சாத்தியமான மிகச் சிறந்த உடன்படிக்கையை ஒன்றியத்திடமிருந்து தான் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

அது நிராகரிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ந்து போராடப் போவதாகப் பிரிட்டன் பிரதமர் தெரிவித்தார்.

பிரெக்சிட் திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் 16 நாளில் பிரிட்டன் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ள வேண்டிய உறவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள திட்டமிடுகின்றன.

இதற்காகத் தயாரிக்கப்பட்ட முதல் வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் கடந்த ஜனவரி மாதம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதையடுத்து வரைவு ஒப்பந்தம் புதிதாகத் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக முன்வைக்கப்பட்ட நிலையிலேயே அது தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒப்பந்தம் ஏதும் இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறலாமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். அதையும் பாராளுமன்றம் ஏற்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரேசா மே தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...