ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன் | தினகரன்

ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன்

உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ரியல் மெட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 மாதங்களுக்கு முன்னதாக அணியின் பயிற்சியாளர் பொறுப்பை துறந்த, 46 வயதான சினேடின் சிடேன், தற்போது அணியின் நிலையை கருத்திற் கொண்டு அணியை மீள கட்டியெழுப்புவதற்காக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். இதற்கமைய சினேடின் சிடேன், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை தனது பயிற்சியாளர் பதவியை தொடர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் அணியின் பொறுப்பினை ஏற்றதனை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைவதாக, சினேடின் சிடேன், இதன்போது கூறியுள்ளார்.

தற்போது அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள சினேடின் சிடேன், இதற்கு முன்னதாக 3 ஆண்டுகளாக ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

இவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில், ரியல் மெட்ரிட் அணி, யு.இ.எப்.ஏ. சாம்பியன் லீக் கிண்ணத்தை மூன்று முறையும், பீபா கழக உலகக் கிண்ணத்தை இரண்டு முறையும், யு.இ.எப்.ஏ. சுப்பர் கிண்ணத்தை இரண்டு முறையும், லா லீகா கிண்ணத்தை ஒரு முறையும், சுப்பர் கோப்பா கிண்ணத்தை ஒரு முறையும் வென்றது.

சம்பியன் கிண்ணத்தை வென்றுக்கொடுத்த கையோடு கடந்த ஆண்டு மே மாதம் சினேடின் சிடேன், ரியல் மெட்ரிட் அணியிலிருந்து விடைபெற்றுச் செல்ல, ஸ்பெயினின் ஜூலன் லோபெட்டிகுய், பயிற்சியாராக நியமிக்கப்பட்டார்.

எனினும் அவரது பயிற்சியில் திருப்தி இல்லாத ரியல் மெட்ரிட் அணி நிர்வாகம், அவரின் ஒப்பந்தத்தை இரத்து செய்து, ஆர்ஜன்டீனாவின் முன்னாள் வீரரான சன்டியாகோ சொலாரியை பயிற்சியாளராக நியமித்தது.

அதன்பிறகு சற்று எழுச்சிக்கண்ட ரியல் மெட்ரிட் அணி, சில வெற்றிகளை பதிவு செய்தாலும், பல அணிகளிடம் அவமான தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற அஜாக்ஸ் அணியுடனான சம்பியன்ஸ் லீக் இரண்டாவது லெக் போட்டியில், ரியல் மெட்ரிட் அணி, 1-4 என்ற கோல்கள் கணக்கில் அவமான தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.

அத்தோடு லா லிகாக கால்பந்து தொடரில், பரம எதிரியான பார்சிலோனா அணியுடனான தோல்வி, கோபா டெல் ரே தொடரிலிருந்து வெளியேற்றம் என ரியல் மெட்ரிட் அணி படுதோல்வியை சந்தித்தது.

இதற்கிடையில், அதாவது சினேடின் சிடேனின் விலகலின் பின்னர், ரியல் மெட்ரிட் அணி கழகங்களுக்கிடையிலான உலகக்கிண்ணத்தை மட்டுமே வென்றது.

இத்தனை தோல்விகளை கடந்து வந்தாலும், இறுதியாக நடைபெற்ற அஜாக்ஸ் அணியுடனான தோல்வி, அணி நிர்வாகத்தை மட்டுமல்ல இரசிகர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இதனால், அணியை மீள கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கோடு, தற்போது சினேடின் சிடேனை மீண்டும் பயிற்சியாளராக ரியல் மெட்ரிட் அணி நியமித்துள்ளது. ரியல் மெட்ரிட் அணியின் சொந்த கால்பந்து தொடராக பார்க்கப்படும் லா லிகா கால்பந்து தொடரில், ரியல் மெட்ரிட் அணி, 51 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ரியல் மெட்ரிட் அணியிலிருந்து நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ விலகி சென்றாலும், கேரத் பேல், செர்ஜியோ ரமோஸ், பென்சிமா உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் அணியில் உள்ளனர்.

ஆகவே சினேடின் சிடேன், இவர்களை சரியாக வழிநடத்தி, மீண்டும் ரியல் மெட்ரிட் அணியை மீள கட்டியெழுப்புவார் என அணிக நிர்வாகம் மற்றும் இரசிகர்கள் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...