Friday, April 26, 2024
Home » கொள்கையில் உறுதியான உயர்ந்த மனிதர் ஜோசப்

கொள்கையில் உறுதியான உயர்ந்த மனிதர் ஜோசப்

அன்னார் மறைந்து 18 வருட நிறைவு

by Gayan Abeykoon
December 28, 2023 8:16 am 0 comment

‘ஜோசப் அண்ணன்’ என அவரது அபிமானிகளால் அன்போடு அழைக்கப்பட்ட ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நத்தார் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.

அவர் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழினத்தின் பற்றாளர், ஊடகவியலாளர், மனிதஉரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல தளங்களில் பிரகாசித்தவர் அவர்.

ஜோசப் அவர்கள் 1960 களிலிருந்து செய்தியாளராக பணியாற்றத் தொடங்கினார். தேசியப் பத்திரிகைகளுக்கு மட்டக்களப்பு செய்தியாளராக அவர் பணியாற்றி வந்தார். ஊடகத்துறையில் அச்சமின்றி, துணிச்சலுடனும் சுதந்திரத்துடனும் செயற்படும் தனித்துவத்தை ஜோசப் கொண்டிருந்தார்.

ஊடகவியலாளராக மட்டக்களப்பில் பணியாற்றிய நான், ஏனைய ஊடகவியலாளர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டேன். அவர்களில் ஜோசப் அவர்களும் ஒருவர். அவர் அரசியல்துறையில் ஈடுபட்டாலும் ஊடகத்துறையை மறந்து விடாமல், பத்திரிகையாளர்களுடன் தோழமையுடன் செயற்பட்டார்.

1980 களின் பின்னர் செய்தியாளர்களுக்கென ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கரு உதயமானது. இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள செய்தியாளர்களை இணைத்து ‘கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்’ 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முதலாவது தலைவராக ஜோசப் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக செல்லையா நாகராசா தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இருந்த செய்தியாளர்கள் இதில் இணைக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் செய்தியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகும்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2004 ஆம் ஆண்டு வரை சமூக அரசியல் ஊடகத்துறை என பல மட்டங்களில் சிறப்பாக செயற்பட்டது. ஊடகத்துறையில் மட்டுமன்றி சமூக அரசியல் துறைகளிலும் சிறப்பாக செயற்படுவதற்கு அத்திவாரம் இட்டு, வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயற்பட்டவர் ஜோசப் அவர்களாவார்.

அக்காலத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுவதற்கு துணிச்சலுடன் செயற்பட்டவர் ஜோசப் ஆவார்.

அவ்வேளையில் ஊடகவியலாளராக இருந்த ஜோசப் அவர்கள், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதிலும் மனித உரிமை மீறல் சம்பவங்களை திரட்டி சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் ஓயாமல் உழைத்தார்.

1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பை பெரும் அழிவுக்கு உட்படுத்திய சூறாவளி வீசியது. அந்த சூறாவளியின் பின்னர் பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அந்த புனரமைப்பு நிவாரணப்பணிகளில் ஊழல் மோசடிகளும் பெருமளவு இடம்பெற்றன. இந்த ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன், துல்லியமான தரவுகளுடன் ‘சூறாவளி பூராயம்’ என்ற தலைப்பில் ஜோசப் தொடர்கட்டுரை ஒன்றை தேசியப் பத்திரிகையொன்றில் எழுதினார்.

புலனாய்வு செய்தித் திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை ஒரு சிறந்த உதாரணமாகும்.

நெருக்கடியான காலகட்டத்தில் இளம் ஊடகவியலாளர்களுக்கு அவர் வழிகாட்டியிருந்தார்.

1990 இல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளராக, மனித உரிமை செயற்பட்டாளராக அவர் பெரும் பணியாற்றினார். இதற்கு அவரின் மொழிப்புலமையும் துணிச்சலும் காரணமாகும்.

மரணிக்கும் தருணம் வரை கொள்கையிலும், தமிழ்ப் பற்றிலும் உறுதியாக இருந்த ஒரு உயர்ந்த மனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆவார்.

இரா. துரைரத்தினம்…

(ஊடகவியலாளர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT