முடிவின்றித் தொடரும் புலம்பெயர் பயணம்! | தினகரன்

முடிவின்றித் தொடரும் புலம்பெயர் பயணம்!

இலங்கையில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயருதல் கடந்த முப்பத்தைந்து வருட காலத்துக்கு மேலாக முடிவின்றி இன்றும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. 

கடந்த 1983 ஜுலைக் கலவரம் நடந்து முடிந்ததில் இருந்து இலங்கையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தல் ஆரம்பமாகி விட்டது எனக் கூறுவதே மிகவும் பொருத்தம்.

இங்கிருந்து முதன்முதலில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கியவர்கள் தமிழர்கள். இலங்கைத் தமிழர்கள் முதன்முதலில் தென்னிந்தியாவை நோக்கியே அகதிகளாகப் படையெடுத்தனர். வடபகுதிக் கடற்பரப்பினூடாக சாதாரண மீன்பிடிப் படகுகள் மூலம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக பல்லாயிரக்கணக்கானோர் அக்காலத்தில் தமிழ்நாட்டை நோக்கி அகதிகளாக செல்லத் தொடங்கினர். 

‘தமிழர்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு இலங்கை பொருத்தமற்றதொரு நாடு’ என்ற செய்தியை 1983 ஜுலைக் கலவரம் தெட்டத் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்திய போது, இலங்கைத் தமிழர்களுக்கு அதனை விட வேறு தெரிவுகள் எதுவுமே அப்போது இருக்கவில்லை. உயிரை மாத்திரம் காப்பாற்றிக் கொண்டாலே போதுமானது என்ற எண்ணம் மாத்திரமே அன்றைய காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்தது. 

இலங்கைத் தமிழர்கள் மீது மிகவும் காட்டுமிராண்டித்தனமாக இனஒழிப்பு வன்முறையை ஜுலைக் கலவரத்தின் போது குண்டர்கள் கட்டவிழ்த்து விட்டதனால் இங்குள்ள தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு இந்தியா முழுமனதுடன் அன்று தயாராக இருந்தது. அதேசமயம் ‘தொப்புள்கொடி உறவு’ என்ற வகையிலும், இனப்பற்று காரணமாகவும் தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கரம் நீட்டி, அடைக்கலம் அளித்ததையெல்லாம் என்றுமே மறந்து விட முடியாது. 

முதன்முதலில் தமிழ்நாட்டை நோக்கி ஆரம்பமான புலம்பெயர் படலம் படிப்படியாக மேற்குலகம் நோக்கி பரவத் தொடங்கியது. 1983 ஜுலைக் கரவலத்தின் போது, தென்னிலங்கையில் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய தமிழர்களில் படித்த மக்களினதும், மேட்டுக்குடி வர்க்கத்தினரதும் பார்வை மேற்குலத்தின் மீதே விழுந்தது. 

ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களிலுள்ள ஏதேனுமொரு நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்வதன் மூலம் அந்நாட்டில் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழ முடியுமென அவர்கள் எதிர்பார்த்ததில் தவறேதும் இல்லை.  

தமிழர்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக வன்முறைக் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதல்களுக்கும், இனரீதியான வன்முறைக் கட்டவிழ்ப்புக்கும் நாள்தோறும் அஞ்சி வாழ்வதை விட கண்காணாத தேசமொன்றுக்குச் சென்று உயிராபத்தின்றி வாழ்வதே மேலென்று தமிழர்கள் அவ்வேளையில் எண்ணினர். 

அக்காலத்தில் தமிழர்களின் அசைக்க முடியாத சொத்தாக கல்வி விளங்கியது. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பதவிகளைக் கைப்பற்றிக் கொள்கின்ற குறுக்குவழிகளை நாட வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. கல்விப் புலமையினாலும், சுயதிறமையினாலும் இலக்குகளை எட்டிப் பிடிக்கக் கூடிய வல்லமையுடையவர்களாக இருந்த தமிழர்கள், தாங்கள் காலூன்றிய புலம்பெயர் நாடுகளில் தங்களது திறமைகளால் வாழ்வை வளம்படுத்திக் கொண்டனர். 

அதேசமயம், புலம்பெயர் நாடுகளும் இலங்கைத் தமிழர்களை ‘விசுவாசம் நிறைந்த கடின உழைப்பாளிகள்’ என்ற முத்திரையுடன் அரவணைக்கத் தொடங்கியது. தாங்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தேசத்தின் கலாசார பண்பாடுகளையும், அங்குள்ள மக்களின் பாரம்பரியங்களையும் உள்வாங்கியபடி தோழமையுடன் வாழத் தலைப்பட்ட தமிழர்களை புலம்பெயர் தேசங்கள் ஒருபோதுமே வெறுப்புடன் நோக்கியதில்லை.  

இலங்கைத் தமிழர்கள் இன, மத கலாசார ரீதியில் நெகிழ்வுப் போக்குடையவர்களாக விளங்கியதனால் புலம்பெயர் தேசங்களில் எல்லாம் அவர்களால் உயர் பதவிகளை அலங்கரிக்கக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக இலங்கைத் தமிழர்களின் மேற்குலக புலம்பெயர்வு மேலும் தீவிரமடைந்தது. 

இலங்கையில் காலப் போக்கில் யுத்தம் தீவிர நிலைமைக்கு வரத் தொடங்கியதையடுத்து இங்குள்ள பெரும் கல்விமான்களும் கூட வகைதொகையின்றி மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்தனர். இலங்கையில் இருந்து மக்கள் புலம்பெயர்வதென்பது இன்னும்தான் முடிவுக்கு வந்தபாடாக இல்லை. 

சொந்த நாட்டில் இருந்து உயிருக்கு அஞ்சி வேறு நாடுகளுக்குப் படையெடுத்த தமிழர்கள் காலப் போக்கில் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நோக்கில் பொருளாதார அகதிகளாக மாறத் தொடங்கினர். சட்டபூர்வமான புலம்பெயர்தல் என்பதை ஆரம்ப காலத்திலேயே காண முடிந்தது. படிப்படியாக சட்டவிரோதமான முறையில் அவர்கள் செல்லத் தலைப்பட்டனர். 

விமானம் மார்க்கமாக பல்வேறு நாடுகளையும் சென்றடைந்து, அங்கிருந்து படகுகளிலும், கொள்கலன்களுக்குள் மறைந்திருந்தும் ஐரோப்பிய தேசங்களை சட்டவிரோதமாக சென்றடையும் தந்திரமான வழிகளை அவர்கள் அறிந்து கொண்டனர். 

மேற்குலகில் புலம்பெயர்ந்த நிலையில் இன்று வாழ்வோரை எடுத்துக் கொள்வோமானால் அவர்களில் சட்டவிரோதமாக அங்கு பிரவேசித்துக் கொண்டோரே அதிகம் எனலாம். இவ்வாறு சட்டவிரோதமாகச் செல்லும் தமிழர்களுடன் காலப் போக்கில் ஏனைய இன மக்களும் சேர்ந்து கொண்டனர். எனவே இலங்கையில் இருந்து இடம்பெயர்வோரில் தமிழர்களுக்கு நிகராக ஏனைய இனத்தவரும் இப்போது அடங்கியுள்ளனர். இவர்களெல்லாம் தற்போது உண்மையிலேயே ‘பொருளாதார அகதிகள்’ ஆவர். 

இலங்கையில் இருந்து மாத்திரமன்றி, வேறு நாடுகளில் இருந்தெல்லாம் கடல் வழியாக படகுகளில் ஏராளமானோர் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவுஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு கதவை மூடி நீண்ட காலமாகி விட்டது. ஆனாலும் உயிரைப் பணயம் வைத்தபடி கடல்வழிப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 

இலங்கை மக்கள் இவ்விதம் வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வது அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. எமது நாட்டின் குடிவரவு, குடியகல்வுச் சட்டம் அப்பட்டமாக மீறப்படுவது ஒருபுறமிருக்க, அந்நிய நாடுகள் இதனால் வீண் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றன. எமது நாட்டில் பொருத்தமான வேலைவாய்ப்புகளும், அதிக வேதனமும் இருப்பின் இவ்வாறு மக்கள் புலம்பெயர வேண்டிய அவசியமில்லை என்ற வாதம் உண்மையாகவே இருக்கக் கூடும். ஆனாலும் உலக நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு விரோதமாக எமது நாட்டவர்கள் நடந்து கொள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கலாகாது!     


Add new comment

Or log in with...