Thursday, March 28, 2024
Home » ‘மலையக சமூக மாற்றமும் இனத்துவ அடையாளத்தின் நீட்சியும்’ ஒரு பகிர்வு
மலையக கலை, கலாசார சங்க ஏற்பாட்டில்

‘மலையக சமூக மாற்றமும் இனத்துவ அடையாளத்தின் நீட்சியும்’ ஒரு பகிர்வு

by Gayan Abeykoon
December 28, 2023 10:14 am 0 comment

 ‘மலையக சமூக மாற்றமும் இனத்துவ அடையாளத்தின் நீட்சியும்’ நினைவு கூரும் நிகழ்வுவொன்று அண்மையில் கண்டி விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் முன்னாள் தமிழ்மொழி பாட இணைப்பாளரும் சங்கத்தின் தலைவருமான ஆர். பார்த்தீபன் தலைமையில் மலையக கலை கலாசார சங்க எஸ். பரமேஸ்வரனின் கிரீன் லீப் பவுன்டேசன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் உட்பட கலைஞர்கள், பாடசாலை சமூகத்தினரும் கலந்துகொண்ட நிகழ்வில் மலையகம் தொடர்பான கைநூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை மலையக கலை கலாசார சங்கத்தின் எஸ். பரமேஸ்வரன் பெற்றுக்கொண்டதோடு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் இரா. அ. இராமன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

எழுத்தாளர் கவிஞர் ரா. நித்தியானந்தன் இந்நிகழ்வில் உரையாற்றும் போது;

இன்றைய மலையகம் 200 என்பதை அடையாளம் காணுகின்றபோது ஒரு பரந்துபட்ட சமூக அமைப்பினை நாம் அடையாளம் காணுகின்றோம். மலையகம் 200 என்று கொண்டாடுகின்ற இந்த நிகழ்வு வெறுமனே இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் வந்தார்கள். துன்பப்பட்டார்கள். அவர்களுடைய துயரங்களைப் பேசுவது மாத்திரமல்ல. இன்றைய எதிர்கால சந்ததியினர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது. எவ்வாறு மாற்றியமைக்கக் கூடியதாக இருக்கும் என்பதைப் பற்றி பேசுவதாக இருந்தால் அதனை உற்சாகம் ஊட்டி, வலுப்படுத்துவதாக இருந்தால் இன்றைய நிகழ்வு மிகச் சிறந்த நிகழ்வாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

மலையகம் என்பது ஒரு மாற்றம் பெற்றுவரும் சமூகமாகும்.உண்மையிலேயே அவர்கள் அடிப்படையில் நேரடியாக தொழில்சார் மக்களாக இருப்பவர்கள். அவர்கள் ஏறக்குறைய 1.5 விகிதமானர்கள் இருக்கின்றனர். 1.6 விகிதமானவர்கள் பகுதி நேர தொழிலாளர்கள் இருக்கின்றனர். தோட்டங்களுக்கு வெளியே சென்று வேலை செய்பவர்கள் உள்ளனர். மிகப் பெருந்தொகையானவர்கள் 5.5 விகிதம் அளவில் கீழ் மத்திய தர வர்க்கமாகவும் கல்வி கற்ற சமூகமாகவும் ஒரு வளர்ந்து வந்த சமூகமாகவும் நகர் புறங்களிலும் கிராமப் புறங்களிலும் என்று பல்வேறு பகுதிகளில் பரந்து வாழுகின்றார்கள். எனவே இதில் பரவி வாழுகின்ற சமூகத்தைப் பற்றி தெளிவான பதிவுகள் இல்லை. அவர்கள் யார்? எப்படி இருக்கிறார்கள், அவர்களுடைய அபிலாஷைகள் என்ன? அவர்களுடைய அரசியல்,பொருளதார நிலைமைகள் என்ன? அவர்களுடைய பின்னணி என்ன என்பது பற்றிய அறிக்கை இற்றைவரையிலும் இடம்பெறவில்லை. அது கட்டாயம் இடம்பெற்று இருக்க வேண்டும்.

ஏனென்றால் பெரும்பான்மை எப்பொழுதுமே கல்வி கற்ற சமூகமாகவும், மத்திய தர வர்க்கமாகவும் வளர்ந்து வரும் சமூகமாக இருக்கின்றனர். மலையகத்தவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள், தொழிலாளர்கள் குடியுரிமையற்றவர்கள் என்று வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. ஆனால் நிலைமை அப்படி அல்ல. இங்கு நிறையப் படித்தவர்கள், பேராசிரியர்கள் என நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களுடைய வருகையைப் பற்றியும் அவர்களுடைய அபிலாஷைகள் பற்றியும் நாங்கள்தான் அவர்களைப் பற்றிப் பேச வேண்டும். நிலைமைக்கு ஏற்றமாதிரி எங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

மலையக சமூகத்திற்கு எவ்வகையிலான கோட்பாடு ஒன்றை வரையலாம் என்ற கேள்வியினை முன் வைக்கின்றேன்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் நியூட்டன் குனசிங்காவின் கோட்பாட்டு அடிப்படையில் குடியாண்மை சமூகம் என்பார்கள். அவர்கள் எவ்வளவுதான் மாற்றத்தைக் கொண்டிருந்தாலும் கூட கிராமிய விவசாய மக்கள் சமூகமாக அவர்கள் பல்கலைக்கழகம் சென்று நகரப் புறங்களில் கல்வி கற்று விட்டு மீளவும் கிராமப்புறங்களுக்கே சென்று விடுவார்கள். கிராமப்புறங்களில் தலைமை தாங்கக் கூடிய சமூகமாக இருப்பார்கள். அந்த சமூக நிலைமை மலையகத்தில் இல்லை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் வர்த்தக சமூகமாகவும் விவசாய சமூகமாகவும் இரண்டும் கலந்த நிலையில் இருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைப்பதற்காக பள்ளிகள் இருக்கின்றன. அதன் ஊடாக தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அந்த மாதிரியான ஏற்பாடுகள் மலையகத்தில் இல்லை. யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையிலும் அவர்களும் குடியான்மை சமூகமாக இருந்து வருகின்றனர். விவசாயத்தை மையமாக் கொண்டு இயக்குகின்றனர். அவர்களும் தங்களுடைய சமூகத்திற்கு நிறைய சேவைகள் புரிந்து வருகிறார்கள். அவர்களும் கிராமப்புறங்களில் தலைமை தாங்குகின்ற சமூகமாக இருக்கின்றார்கள். எனவே எங்களுடைய சமூகத்தினுடைய கோட்பாட்டை எந்த தளத்திற்குள் வைத்துக் கொள்வது என்ற கேள்வி எழுகின்றது. சில பேர் நகரங்களிலும் சில பேர் கிராமங்களிலும் உள்ளனர். சில பேர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். கல்வி கற்ற சமூகமாக ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எனப் பல பிரிவுகளில் இருக்கிறார்கள். எனவே இந்த வகைகயில் பார்க்கின்ற போது இந்த சமூகத்தை ஒருமைப்படுத்தி சித்தாந்தத்தை கோட்பாட்டை உருவாக்கி சமூக மாற்றத்தை மேலும் மேற்கொள்ளலாம் என்ற பதிவு ஏற்படுத்தும் நிகழ்வாக இதனைக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேராசிரியர் விஜயச்சந்திரன் உரையாற்றுகையில்;

மலையகம் 200 இப்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இந்நிகழ்வு இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பித்து இப்பொழுது இதன் இறுதி நிகழ்வாக 30 ஆம் திகதி கிளிநொச்சியிலும், 31 ஆம் திகதி ஹட்டனிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மலையகம் 200 என்னும் அடையாளம் அதாவது பெருந்தோட்டத்துறையை அடிப்படையாகக் கொண்டு குறிப்பாக மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து முதன் முதலாக 1823 ஆம் ஆண்டில் கம்பளையில் சிங்கப்பிட்டிய என்ற இடத்திலே முதல் கோப்பித் தோட்டத்தை உருவாக்கியவர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு 2023 ஆம் ஆண்டு 200 வருடங்களாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் வரலாறு என்று பார்த்தால் 2, 3 நூற்றாண்டுகளுக்கு முந்தியவையே. இராவணன் காலத்தில் தொடங்கி சோழர்களின் காலத்தைக் கடந்து இறுதியாக இராஜசிங்கன் காலத்தோடு நிறைவு பெறுகின்றது. அதற்குப் பிறகு வந்த காலம் தான் தொழிலாளர் பரம்பரையாக இந்தியாவில் இருந்து பெருந்தொகையான மக்கள் வந்து ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி இலங்கைத் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப்பைச் செய்து 200 வருடங்களாக 8 பரம்பரையாக உழைத்து விட்டு ஓட்டாண்டியாக இருக்கின்ற மூன்றில் இரண்டு பங்கினர் சாதாரண தோட்டத் தொழிலாளியோ அல்லது தொழிலாளர் சார்ந்த சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, இந்த நிகழ்வினை அடையாளப்படுத்தும் சமூகமாகத்தான் மலையகம் 200 என்ற நிகழ்வு இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்வில் 200 வருட வரலாற்றை வெறுமனே ஒரே மேடையில் பேசி விட முடியாதளவுக்கு இவர்களுடைய வாழ்க்கைகள், சோதனைகள், வேதனைகள், சீரழிவுகள், சாதனைகள் எனக் கடந்து உள்ளன. இப்பொழுது எதிர்கால சவால்களை நோக்கி நிற்கின்ற கால கட்டமாகயிருந்து கொண்டிருக்கின்றது

இந்த மக்களுடைய 200 வருட வரலாற்றுப் பகுதியினை 4 கட்டமாக பிரித்துப் பார்ப்போமானால் 1823 -1873 வரைக்கும் இவர்களுடைய வாழ்க்கைகள் மிகவும் சோதனைகள் நிறைந்தவையாக இருந்தன. இலங்கைக்கு தோட்டத் தொழிலாளியாக வந்தவர்கள் இலங்கையில் நிரந்தரமாக இருக்க வில்லை. மனைவி அங்கே கணவன் இங்கே என்று அவர்கள் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்கள். இரண்டு மூன்று வருடங்கள் தோட்டங்களில் வேலை செய்வார்கள். பிறகு இந்தியா செல்வார்கள். இவர்கள் நோய் நொடி காரணமாக போகும் போது உயிர் இழந்தார்கள். வரும் போது உயிர் இழந்தார்கள். முதல் வருடம் அவர்களுக்கு சோதனையான காலம் ஆகும். இரண்டாவது கட்டத்தைப் பார்க்கின்ற போது 1873 – 1973 வரையிலும் அவர்களுக்கும் மிகவும் வேதனை நிறைந்தது. கோப்பி தேயிலை செய்கையை விரிவாக்குகின்ற போது மேல் பகுதியை நோக்கி கடுமையான குளிர், சரிவான மலை, போதிய உணவு இல்லை. பாதுகாப்பற்ற வாழ்க்கை என்ற வகையிலே வாழ தொடங்கிய காலம். தேயிலைப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் ஆங்கிலேயர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். கோப்பி பயிர்ச்செய்கை எனும் போது வருடத்தில் இரண்டு தடவைகள்தான் அதன் அறுவடைகள் நடைபெறும்.

1978 இல், 1983 இல் நடைபெற்ற இன வன்முறைகள் இடம்பெற்றன. கண்டி நுவரெலியா, பதுளை, கேகாலை, கொழும்பு, இரத்தினபுரி மாவட்டங்களில் வாழ்ந்த மலையகத் தோட்ட மக்களின் உயிர் உடைமைகள் அழிக்கப்பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். வீதியில் தூக்கி எறியப்பட்டனர். இந்தியாவுக்குச் செல்வதா அல்லது வேறு எங்காவது செல்வதா என்று இரண்டும் கெட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். மிகவும் சீரழிந்த காலமாக நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது.

ஆயினும் 1973 ஆம் ஆண்டுக்கு பின் வந்த காலம் இந்த மக்களுடைய மீட்சிக் காலமாகவும் அல்லது இந்த மக்கள் சாதனைகளைப் புரிந்து கொண்ட காலமாகவும் நாங்கள் பார்க்கிறோம். 1977 இல் இழந்த பாராளுமன்ற உரிமையை நுவரெலியா மாவட்டத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் தனியாகப் போட்டியிட்டு வென்று பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுகிறார். அது மலையக மக்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.

மீண்டும் 1988 இல் மலையக மக்களுக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கான திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொண்டு வந்தார். அது எங்களுடைய மக்களுடைய அரசியல் பலத்தை 1987 இல் கொண்டு வரப்பட்ட மாகாண சபை 1991 கொண்டு வரப்பட்ட பிரதேச சபை, 1989 களில் பாராளுமன்ற தேர்தல், 1994 இல் அரசியலில் மீண்டும் பிரதிநித்துவம் பெற்று 10 -11 ஆசனங்களைக் காப்பாற்றிக் கொண்ட காலம் ஆகும். இக்கால கட்டத்தை இந்த மக்கள் சாதனை படைத்துக் கொண்ட காலமாகப் பார்க்கலாம். 1973 இல் தோட்டப் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது. மலையக மக்களுடைய கல்வியில் நிலையான வளர்ச்சிகள் ஏற்பட்டன. சீடா திட்டம் மலையக கல்விக்கு அடித்தளத்தை வழங்கியது. எங்களைப் போன்றவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. ஆசிரியர் நியமனங்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், கிராம உத்தியோகஸ்தர் நியமனங்கள், அரச தொழில் வாய்ப்புக்கள் என அபிவிருத்தி இலக்கை நோக்கி மலையகம் எழுச்சி பெற்றது.

1989 ஆம் ஆண்டு சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் மலையக மக்கள் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டது. சலுகைகளுக்காக கையேந்தி இருந்த மலையக சமூகத்தை உரிமை சார்ந்த போராட்டத்திற்காக தர்மலிங்கம், காதர், லோறன்ஸ் போன்றவர்கள் பங்களிப்புச் செய்தார்கள். மலையகத்தின் உரிமை சார்ந்த விடயமாகப் பேசப்பட்டது. 1994 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தப்பட்டது. முதன் முதல் வீடமைப்பு நிர்மாணத்துறை தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சு வழங்கப்பட்டது. அவருடைய ஐந்து வருட காலத்தில் மலையகமெங்கும் தோட்டப்புறத்தில் 25,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. தோட்டப்புறங்களில் மின்சாரம், வீதிகள், போக்குவரத்துகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரைக்கும் அந்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

ஆகவே கடந்த 20 வருடம் மலையக மக்களுடைய உன்னதமான கால கட்டம் என்று கூறலாம். இதற்குப் பங்காற்றியவர்களாக இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இருந்தார்கள். அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் இருவரும் ஒன்றிணைந்துதான் இந்த பிரஜா உரிமையை வழங்கினார்கள். அதற்குப் பின் மலையக அரசியலில் பன்முகத் தன்மை காணப்பட்டது. புதிய அரசியல் கட்சிகள் உருவாகின. மலையகத்தில் போட்டி அரசியல் தோற்றம் பெற்றது. புதிய உள்ளுராட்சி சபைகள் உருவாக்கியுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக அரசியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர். ரமேஸ் உரையாற்றுகையில்;

மலையகம் 200 என்பது ஓர் ஆரம்பப் புள்ளி மாத்திரமே. இது 50, 60 ஆண்டுகளில் எந்த நிலையை அடைய வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய ஒரு வரைபடத்தை வரைவதற்கான ஒரு நிகழ்ச்சியாக நான் இதனை பார்க்கின்றேன். இலங்கை அரசியல் கட்டமைப்பில் இந்த சமூகத்தின் நிலைப்பாடு ஆங்கீகாரம் என்ன என்பதற்கான ஒரு வரைபடத்தை எங்களால் உருவாக்க முடியவில்லை. இந்த அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கு கூட பொருளாதாரம் சமூக அரசியல் ரீதியாக எங்களுடைய அபிலாஷைகள் என்ன என்பது பற்றி திட்டவட்டமாக சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வரைபடத்தை ஒரு ஆவணத்தைத் தயாரிப்பது என்பது கூட எங்களால் இந்தளவுக்கு முடியாது.

நாங்கள் தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட அமைப்பு ரீதியாக இருந்து கொண்டு இருக்கின்றோமே தவிர ஒரு தேசிய ரீதியாக ஆவணத்தை இந்தச் சமூகம் தொடர்பாக தயாரிப்பது மிகவும் முடியாத காரியமாக காணப்படுகிறது. ஆகவே அப்படியான நிலைமை இந்தச் சமூகத்தைக் கொண்டு செல்வதற்கு இப்படியான பரந்த மட்டத்தில் உருவாக்குவதற்கு இந்த மலையகம் 200 என்பது ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் மல்லிகைப்பூ திலகர் உரையாற்றும் போது;

தோட்டத்தொழிலாளர்கள் ஒரு இலட்சம் அளவுக்கு சொற்பவும் கூடுதலானவர்களே உள்ளனர். அந்த தொட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோட்ட சமூகம் இருக்கின்றது. அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்வதற்கு தயாராக இருக்கின்றோம். எங்களை வளர விடாமல் இருப்பதற்கு பல்வேறு சக்திகள் உள்ளன. அவற்றை வெற்றி கொண்டு பயணிக்க வேண்டும் எனவும் பெண்களும் சரி சமமாய் எங்களோடு சேர்ந்து பயணிப்பதற்கு நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதழாசிரியர் ஆய்வாளர் மதுசூதனின் கருத்துரையாற்றும் போது;

மலையகம் 200 தொடர்பில் ஏதோ ஒரு வகையில் சமூகப் பொருளாதார ஒரு வரலாற்றுப் பண்பாட்டு நோக்கில் அடையாளப்படுத்துகின்ற அல்லது அந்த தொடர்ச்சியை தொகுத்துப் பார்க்கின்ற ஓர் ஆய்வு முயற்சியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு எடுத்துரைப்பு முறையாக இருந்தாலும் சரி எங்களுடைய அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திக்கின்ற ஏதோ ஒரு வகையில் உதவக் கூடியதாக இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT